காந்த குரலோனான கேஜே யேசுதாஸ்க்கு இந்திய அரசின் இண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1940-ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ். இசைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் யேசுதாஸ்க்கும் சின்ன வயதில் இருந்தே இசையின் மீது ஆர்வம். 1961-ம் ஆண்டு கால்பாடுகள் என்ற படத்தில் ‛‛ஜாதி பேத மத.. என்ற பாடல் தான் யேசுதாசின் முதல்பாடல். அந்தப்பாடல் ஹிட்டாக அமைய தொடர்ந்து பல வாய்ப்புகள் வந்தன.
தமிழில் வீணை எஸ்.பாலசந்தர் இயக்கிய பொம்மை படத்தில் நீயும் பொம்பை நானும் பொம்மை என்ற பாடலை பாடினார். 50 ஆயிரம் பாடல் தமிழ், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட இந்தியாவின் அநேக மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். யேசுதாஸ் கிறிஸ்தவராக இருந்தபோதும் தீவிர ஐய்யப்ப பக்தர், இவர் பாடிய ஹரிவராசனம் பாடல் பாடிய பிறகு தான் கோவில் நடை சாத்தப்படுகிறது.
விருதுகள் : 7 முறை தேசிய விருது, 43 முறை பல்வேறு மாநில விருதுகள், 5 முறை பிலிம்பேர் விருதுகள் உட்பட இவர் பெற்ற விருதுகள் ஏராளம். 1975ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2002-ம் ஆண்டு பத்மபூஷண் விருதும் வழங்கி கௌரவித்த இந்திய அரசு, இப்போது பத்மவிபூஷண் விருது அறிவித்து அவரை மேலும்கௌரவப்படுத்தியிருக்கிறது.