ட்ரோன்களை அழிக்க நுண்ணலை கருவி!

ஆளில்லாமல் பறக்கும் வாகனங்களான, ‘ட்ரோன்’களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளின் மேல் பறக்கவிடுவது போன்ற அத்து மீறல்களும் அதிகரித்துள்ளன. எனவே, ராணுவம், காவல்துறையினருக்கு ட்ரோன்களை தடுக்க அல்லது அழிக்க புதிய வகை ஆயுதத்தை அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கியிருக்கிறது ‘ரேதியான்’ நிறுவனம்.

மைக்ரோவேவ் எனப்படும் நுண்ணலைகளை பயன்படுத்தும், ‘பேசர்’ என்ற இச் சாதனம் டிஷ் ஆண்டனா போன்ற அமைப்பையும், நுண்ணலைகளை உற்பத்தி செய்யும் பெரிய பெட்டி போன்ற அமைப்பையும் கொண்டிருக்கிறது.

ட்ரோன்கள் பறக்கும் இடத்தை துல்லியமாக கண்டறிய ரேடார் வசதியும் இதில் உண்டு. ட்ரோனை கண்டறிந்ததும், டிஷ் மூலம் அடர்த்தியான நுண்ணலை துடிப்புகளை பேசர் அனுப்பும். இதனால் ட்ரோன்களில் இருக்கும் மின்னணு சாதனங்கள் நொடியில் பொசுங்கிவிடும்.

ஒரே சமயத்தில் பல ட்ரோன்களை இதுபோல பொசுக்க பேசரால் முடியும். அதுமட்டுமல்ல, எதிரியின் செயல்பாடுகளை முடக்க, அவர்கள் பயன்படுத்தும் எந்த மின்னணு சாதனத்தையும் தொலைவிலிருந்தே வறுத்தெடுக்க பேசரால் முடியும். இதை சிவிலியன்கள் பகுதியில் பயன்படுத்தப்படுவதை கற்பனை செய்தாலே நடுக்கம் வருகிறது, இல்லையா?