பழைய துணியிலிருந்து விமான எரிபொருள்!

வீணாகும் பொருட்களை மறுசுழற்சி செய்து, எரிபொருட்களை தயாரிக்க முடியுமா? இன்று, உலகெங்கும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த நோக்கத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

ஜப்பானின் சுற்றுச்சூழல் திட்டமிடல் அமைப்பான, ‘ஜெப்லான்’ பசுமை பூமி அமைப்பு மற்றும் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவை, பழைய துணிகளிலிருந்து, ‘பயோ எத்தனால்’ எனப்படும் எரிபொரு ளை தயாரிக்க முயன்று வருகிறது.

பழைய துணிகளில் உள்ள பருத்தியை நொதிக்கவைத்து, அதில் கிடைக்கும் சர்க்கரைகளை கொண்டு விமான எரிபொருளை தயாரிப்பதே இந்த அமைப்புகளின் நோக்கம். இதற்கென, ஜப்பானிலுள்ள துணி விற்பனையாளர்களிடம் பேசி உபரியான, விரயமான துணிகளைப் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பருத்தியிலிருந்து குறைந்த அளவே சர்க்கரையை பிரித்தெடுக்க முடியும். எனவே, வீணாகும் இதர நார் பொருட்கள் மற்றும் காகிதங்களையும் கலந்து நொதிக்கவைத்தால், கட்டுபடியாகக்கூடிய அளவுக்கு விமான எரிபொருள் கிடைக்கும். இதற்கென உருவாக்கப்பட்டுவரும் சோதனை ஆலையிலிருந்து வரும் பயோ எத்தனாலை, அடுத்த மூன்று வருடங்களுக்கு பயன்படுத்தி வெள்ளோட்டம் பார்க்கவிருக்கிறது ஜப்பான் ஏர்லைன்ஸ்.