பணத்தை விட ரசிகர்களை சம்பாதிப்பதே முக்கியம் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார்.
மஞ்சு விஷ்ணு ஜோடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் ஹன்சிகா, ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-
“தெலுங்கு படங்களில் ரொம்ப நாட்கள் நடிக்காமல் இருந்தது ஏன்? என்று கேட்கிறார்கள். தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வந்ததால் அங்கு ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருந்தேன். இதனால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்த முடியவில்லை. இப்போது மஞ்சு விஷ்ணுவுடன் நடிக்கும் தெலுங்கு படம் நல்ல கதை.
வாய்ப்புகள், போட்டி, மார்க்கெட் இவற்றிலெல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரே நேரத்தில் 5, 6 படங்களில் நடிப்பதிலும் விருப்பம் இல்லை. ஒரு படம் செய்தாலும் அது நல்ல கதையாக இருக்க வேண்டும். நல்ல கதைகளாக இல்லாத படங்களை அதிகமாக இழுத்துப்போட்டு நடிப்பதில் என்ன பயன் இருக்கிறது. நம்பர்-1 கதாநாயகி என்பதை நம்ப மாட்டேன்.
ஒப்பந்தமான படத்தில் முழு ஈடுபாட்டுடன் கடினமாக உழைக்க வேண்டும். மற்றபடி அந்த படம் எப்படி இருக்குமோ? ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா? வசூல் எப்படி இருக்கும் என்றெல்லாம் நினைத்து மனதிற்கு அழுத்தம் கொடுக்க மாட்டேன். அதனால்தான் இத்தனை காலம் சினிமாவில் நீடிக்கிறேன். எனக்கு பேஸ்புக் ரசிகர்கள் 60 லட்சம் பேர் உள்ளனர்.
பணம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதை விட, ரசிகர்களை சம்பாதிப்பதுதான் முக்கியம். இந்த விஷயத்தில் நான் ரசிகர்கள் மனதை முழுமையாக வென்று இருக்கிறேன். பெரிய கதாநாயகன் சிறிய கதாநாயகன் என்றெல்லாம் பார்க்காமல் கதை பிடித்து இருந்தால் நடிக்க ஒப்புக்கொள்கிறேன். கதையும் கதாபாத்திரமும் பிடிக்காமல் இருந்தால் பெரிய நடிகர் படமாக இருந்தாலும் நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டேன். கதைதான் எனக்கு முக்கியம்.
நிறைய கதாநாயகிகள் தங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடிக்கிறார்கள். நீங்கள் அப்படி இல்லையே என்கிறார்கள். நான் எதற்கு அதுபோன்ற படங்களில் நடிக்க வேண்டும்? எனக்கு 25 வயதுதான் ஆகிறது. சின்ன பொண்ணு. எனக்கு வயதான பிறகு அதுமாதிரி படங்களில் நடிப்பதுபற்றி யோசிக்கிறேன். சம்பாதித்த பணத்தில் இந்த சமூகத்துக்கு ஏதேனும் திருப்பி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 31 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன்”.இவ்வாறு ஹன்சிகா கூறினார்.