அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் நடால்.
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிசின் 2-வது அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், 15-ம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்கொண்டார்.
முதல் செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் டிமிட்ரோ ஆக்ரோஷமான விளையாடினார். இதனால் 2-வது செட்டை 7-5 எனக் கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்ற ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 3-வது செட்டை நடால் 7(7) – 6(5) எனக் கைப்பற்றினார்.
இதனால் 4-வது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றுவிடலாம் என நடால் நினைத்தார். ஆனால் டிமிட்ரோவ் நடாலின் எண்ணத்தை சிதறடித்தார். இந்த செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் டிமிட்ரோவ் 7(7) – 6(4) எனக் கைப்பற்றினார்.
இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் நடாலின் கை ஓங்கியது. அவர் 5-வது செட்டை 6-4 என கைப்பற்றி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை பெற நடாலுக்கு 4 மணி நேரம் 56 நிமிடங்கள் தேவைப்பட்டது. கடும் போராட்டத்திற்குப்பின் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
நாளை (29-ந்திகதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் அனுபவம் வாய்ந்த ரோஜர் பெடரரை எதிர்கொள்கிறார்.