அவுஸ்ரேலியா நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினர் மூன்று பேருக்கு அந்நாட்டு அரசின் மிக உயரிய விருது வழங்கப்படுகிறது.
அவுஸ்ரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றிவரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது.
அவுஸ்ரேலியா நாட்டின் தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்று பேர் தேர்வாகியுள்ளனர்.
மருத்துவ துறையில் சிறப்பான சேவை ஆற்றியமைக்காக புருஷோத்தம் சவ்ரிக்கார், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம்சார்ந்த பிறதுறைகளில் சிறப்பாக சேவை செய்துள்ள மக்கான் சிங், அணு மருத்துவ நிபுணரும், சிட்னிநகர தமிழ்ச் சங்க தலைவருமான விஜய குமார் ஆகியோருக்கு 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் அவுஸ்ரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அளிக்கப்படுகிறது.
மேலும், வடக்கு அவுஸ்ரேலியாவில் உள்ள டார்வின் நகரில் வசிக்கும் மக்களின் பசிப்பிணி ஆற்ற மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் இலவச உணவு வழங்கிவரும் தேஜிந்தர் பால் சிங் என்பவர் டார்வின் நகர ‘லோக்கல் ஹீரோ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நான்காவது ஆண்டாக இவருக்கு இந்த சிறப்பு விருது அளிக்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.