சர்ச்சைக்குரிய நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களிற்கு வீடுகளை ஒதுக்கி வழங்க மாவை சேனாதிராசா சம்மதித்திருந்தமை அம்பலமாகியுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் இதனை அம்பலப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே அங்கு குடியமர்ந்துள்ள 200 இற்கும் அதிகமான தமிழ் குடும்பங்கள் வீடுகளோ காணிகளோ இல்லாதுள்ள நிலையில் அவர்களிற்கு வீடு காணி வழங்குவதானால் சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் அவை வழங்கப்பட வேண்டுமென்ற நிபந்தனை தென்னிலங்கை அரசியல்வாதிகளால் தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகளிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாவை சேனாதிராசா இதற்கு சம்மதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களில் தற்போது வெறும் 17 குடும்பங்களே வீடற்ற நிலையில் உள்ளன. ஆனால் அவற்றிற்கு 53 வீடுகள் அதிகாரிகளால் தென்னிலங்கை அரசியல்வாதிகளது பணிப்பினையடுத்து ஒதுக்கி வழங்கப்படவுள்ளது.
இதனிடையே மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாணசபையினை புறந்தள்ளி இவ்வாறு மாவை சேனாதிராசா போன்றவர்கள் சிங்கள குடியேற்றவாசிகளிற்கு வீட்டுத்திட்டத்தை வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாதென கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.