அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையரில் சானியா ஜோடி அரை இறுதியை எட்டியது.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா- குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி, இந்தியாவின் ரோகன் போபண்ணா- கனடாவின் கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணையுடன் மல்லுகட்டியது.
இதில் இரு ஜோடிகளும் தலா ஒரு செட்டை வசப்படுத்திய நிலையில், சூப்பர் டைபிரேக்கரில் நீயா-நானா என்று அனல் பறந்தது. ஒரு கட்டத்தில் 10-10 என்று சமநிலை நீடித்தது. அதன் பிறகு போபண்ணா ஜோடி பந்தை வெளியே அடித்து விட்டு அடுத்தடுத்து தவறுகள் செய்ய, வெற்றிக்கனி சானியா ஜோடியின் மடியில் விழுந்தது.
67 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த ஆட்டத்தில் சானியா-டோடிக் கூட்டணி 6-4, 3-6 (12-10) என்ற செட் கணக்கில் போபண்ணா இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா ஜோடி அடுத்து லியாண்டர் பெயஸ் (இந்தியா)- மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) அல்லது சமந்தா ஸ்டோசுர்- சாம் குரோத் (அவுஸ்ரேலியா) ஆகிய இணைகளில் ஒன்றை சந்திக்கும்.