வீடு, அலுவலகங்களில் உள்ள சாதனங்களை குரல் உத்தரவின் மூலம் இயக்குவதும், அவை தரும் தகவல்களை குரல் மூலமே கேட்பதும், இனி எதிர்காலத்தில் பரவலாகிவிடும் என்கின்றனர் கணிப் பொறி விஞ்ஞானிகள்.இதனால், செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்ட, குரல் சார்ந்த சாதனங்களுக்கு இனி கிராக்கி அதிகரிக்கும்.
இந்த சந்தையில், 2015ல் அமேசான் அறிமுகப்படுத்திய எக்கோ என்ற தட்டையான, ‘ஒலிபெருக்கி’ போன்ற கருவி, அமேசானின் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான, ‘அலெக்சா’வைக் கொண்டு இயங்குகிறது. இதை, ‘ஸ்மார்ட் ஸ்பீக்கர்’ என்றே அமேசான் அழைக்கிறது.
எக்கோ கருவியிடம் அதன் உரிமையாளர் கட்டளையிட்டால், அவர் விரும்பும் பாடல்களை இசைக்கும். கேட்கும் தகவல்களை இணையத்தில் தேடி, பதிலைத் தரும். வீட்டு மின் அமைப்புகளை கட்டுப்படுத்தும்.
வீட்டிலுள்ள பிற சாதனங்களுடன் பேசும். எக்கோவை அடுத்து, ‘டாட்’ என்ற சிறிய ஸ்மார்ட் ஸ்பீக்கரையும் அமேசான் அறிமுகப்படுத்தியது. இந்திய அமேசானில், 8,000 ரூபாய்க்கு கிடைக்கும்; டாட்டும் அலெக்சா மென்பொருளையே பயன்படுத்துகிறது.
கடந்த சில வாரங்களாக, அமேசானின் அலெக்சா மென்பொருளை பயன்படுத்தும் பிற நிறுவனங்களின் கருவிகளும் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளன. லெனோவாவும் அலெக்சாவை பயன்படுத்தும் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.
அலெக்சா மூலம் இயங்கும் விளக்கை ஜெனரல் எலக்ட்ரிக்கும், துணி துவைக்கும் இயந்திரம், உலர்த்தும் இயந்திரம் ஆகியவற்றை விர்ல்பூல் நிறுவனமும் வெளியிட்டுள்ளன.ஏற்கனவே கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள், குரல் கட்டளை தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. என்றாலும், அமேசானின் தொழில்நுட்பத்தையே இப்போது வீட்டு பயன்பாட்டு சாதன நிறுவனங்கள் சுவீகரித்துள்ளதால், அலெக்சா முன்ணணி இடத்தை பிடித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal