மொபைலிலேயே கண் பரிசோதனை!

கண் கண்ணாடிகளை இணையத்திலேயே வாங்கும் வசதி வந்துவிட்டது. ஆனால், துாரப் பார்வையா, கிட்டப் பார்வையா என்பதை அறிய, மருத்துவர்களை நாடவேண்டியிருக்கிறது. இப்போது அதற்கு மாற்றாகவும் ஒரு கருவி வந்திருக்கிறது.

அமெரிக்காவில், கலிபோர்னியாவிலுள்ள, ‘ஐக்யூ’ (Eyeque) என்ற நிறுவனம், அதே பெயரில் உருவாக்கியிருக்கும் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனில் பொருத்திக்கொள்ள வேண்டும். அதனுடன், இலவசமாகக் கிடைக்கும், ‘மை ஐக்யூ’ என்ற மொபைல் செயலியையும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

ஐக்யூ சாதனம் வழியே மொபைலில் தெரியும் சில காட்சி களை பார்த்து, தெளிவாகத் தெரியும் வரை, செயலியில் தெரியும் பொத்தான்களை அழுத்தி சரி செய்ய வேண்டும்.

இரு கண்களையும் தனித் தனியே சோதித்த பின், அந்த சோதனை முடிவுகளை ஐக்யூ நிறுவனத்தின் மேகக் கணினிக்கு அனுப்பவேண்டும். அவ்வளவு தான். அந்த நிறுவனம் உங்கள் கண்களுக்கு, ‘பவர்’ என்ன என்பதை தெரிவிக்கும். அந்த அளவுகளை பயன்படுத்தி, கண்ணாடிக் கடை அல்லது கண்ணாடி விற்கும் இணைய தளத்திற்கு அனுப்பி ஆர்டர் செய்யலாம்.