ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க தமிழர்கள் போராடி வரும் நிலையில் இதற்கென புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை வலியுறுத்தி உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் துவங்கிய இப்போராட்டம் இன்று உலகின் சில நாடுகளில் தமிழர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் அளவுக்கு விரிவடைந்துள்ளது.
நிரந்தர தீர்வை நோக்கி நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் கூகுள் பிளே ஸ்டோரில் புதிய செயலி வெளியிடப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி வீடூஜல்லிக்கட்டு (WeDoJallikattu) என்ற பெயர் கொண்டுள்ளது.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலியில் ஜல்லிக்கட்டு வரலாறு, இதற்கு ஆதரவு வழங்க வாக்கு செலுத்தும் முறை மற்றும் ஜல்லிக்கட்டு பிரச்சனை குறித்து யூட்யூபில் பதிவு செய்யப்படும் கானொளிகளை பார்க்கும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த செயலி போராட்டம் மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டு வரலாறு குறித்து பலரும் அறிந்து கொள்ள வழி செய்வதாக அமைந்துள்ளது. இதே போன்று பல்வேறு செயலிகளும் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.