ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு நடிகர் பார்த்திபன் புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நடிகர் பார்த்திபன் ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நடத்துவதற்கு புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறும் யோசனையாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் (ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்சநீதிமன்றத்தினால் ஒன்றும் செய்ய இயலாது.
மாடு பிடி விளையாட்டுக்காக கிராம சபை கூட்டி தீர்மானித்தால் மத்திய-மாநில அரசு சட்டங்களால் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். இதை சட்டம் அறிந்தோர் சரிபார்த்து சொல்லுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பார்த்திபனின் இந்த யோசனை சமூக வலைத்தளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இவருடைய இந்த யோசனையால் மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.