கடந்த 2009ம் ஆண்டு சிட்னி North Epping-இல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வழக்கில் கொலையாளி எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டார் என்ற தகவல்கள் தற்போது பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளன.
ஜுலை 09 2009 அன்று தமது இல்லத்தில் தூங்கிக்கொண்டிருந்த Min Lin உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
அடுத்த நாள் காலை அந்த வீட்டுக்குச் சென்ற Min Lin -இன் சகோதரி Kathy Lin இக்கொலைகள் பற்றி பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் Kathy Lin-இன் கணவர் Robert Xie-யை மே 2011-இல் கைது செய்தனர்.
எனினும் எந்த ஆதாரங்களை அடிப்படையாக வைத்து Robert Xie கைது செய்யப்பட்டார் என்ற முழுமையான விபரங்கள் வெளியிடப்படாத நிலையில் அவை என்னென்ன ஆதாரங்கள் என்பது தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
1. Robert Xie யின் வீட்டு garage-இல் மிகச்சிறியளவிலான இரத்தக்கறை கொலைகள் நடைபெற்று ஒரு வருடத்தின் பின் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இந்தக் கறையை DNA பரிசோதனைக்கு உட்படுத்தியதில்,கொலை செய்யப்பட்ட 4 பேரின் இரத்த அணுக்கள் அதில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. கொலை செய்த பின்னர் garage-க்குள் சென்ற Robert Xie, இந்த கறையைக் கவனிக்க மறந்திருக்கிறார்.
2. கொலை நடந்த வீட்டின் carpet-இலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட சப்பாத்து அடையாளத்தை வைத்து அது என்ன brand எனக் கண்டுபிடிக்கப்பட்டதுடன் Robert Xie-யும் அதே brand சப்பாத்தைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டது.
3. பொலிஸாரின் விசாரணையின்போது Lin குடும்பத்தவர்கள் கொலை செய்யப்பட்டிருந்ததைத் தனது மனைவியுடன் சேர்ந்து தானும் பார்த்ததாகச் சொன்ன Robert Xie, குறிப்பாக Min Lin-இன் உடல் கட்டிலில் இருந்ததைப் பார்த்ததாக கூறியிருக்கிறார். ஆனால் குறித்த உடல் doona- வால் போர்த்து மூடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
4. தனது சகோதரனின் குடும்பம் கொலை செய்யப்பட்டிருப்பதை Kathy Lin 000 வுக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்த போது, Robert Xie தான் வெளியில் சென்று மாமனார் மற்றும் மாமியரைக் கூட்டிவரப்போவதாக சொன்னது பதிவாகியிருந்தது. கொலைகளைச் செய்வதற்குப் பயன்படுத்திய ஆயுதத்தை மறைப்பதற்காக Robert Xie வெளியில் சென்றிருக்கலாமென பொலிஸார் கருதுகின்றனர்.
இப்படியாக பல ஆதாரங்களின் அடிப்படையில் Robert Xie தான் இக்கொலைகளைச் செய்தார் என, 7 வருடங்களின் பின்னர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கடந்தவாரம் தெரிவித்துள்ளனர்.
வஞ்சம் தீர்ப்பதற்காக இக்கொலைகள் செய்யப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் Robert Xie-இன் மனைவி Kathy Lin, தனது கணவர் இக்கொலைகளைச் செய்யவில்லை என இப்போதும் வாதாடிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.