அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று தொடங்கியது. நேற்று முதல் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்துவருகிறது.
முதல் சுற்று ஆட்டங்களில் முன்னணி வீரர்களான பெடரர், வாவ்ரிங்கா ஆகியோர் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில் மற்றொரு நட்சத்திர வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த ரஃபேல் நடால் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த ப்ளோரியன் மேயரை தனது முதல் சுற்று ஆட்டத்தில் எதிர்கொண்டார்.
மெல்போர்ன் பார்க் ஸ்டேடியத்தில், 36 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில் தொடங்கிய இந்த போட்டி ஆரம்பம் முதல் பரபரப்பாக இருந்தது. போட்டியின் முடிவில் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ரஃபேல் நடால், ப்ளோரியன் மேயரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதே ஜோடி கடந்த 2012-ம் ஆண்டு ரோமில் நடந்த போட்டியில் மோதியபோது, அதிலும் நடால் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு முக்கிய போட்டிகளில் வெற்றி பெறாமல் இருந்த ரஃபேல் நடால், கால் காயத்தாலும் அவதிப்பட்டு வந்தார். தற்போது, காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள நடால், இந்த முறை டைட்டிலை கைப்பற்ற தீவிரமாக போராடிவருகிறார்.