அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வென்றதன் மூலம் வெற்றிக் கணக்கை தொடங்கியுள்ளார்.
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்கோவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக 2 மணி 20 நிமிடங்கள் நீடித்த இப்போட்டியில் 6-1, 7-6 (7/4), 6-2 என்ற செட்கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
5 முறை அவுஸ்ரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற ஜோகோவிச் இந்த முறையும் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளார். முதல் சுற்றில் போராடி வென்ற அவர், இரண்டாம் சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் டேனிஸ் இஸ்டாமினுடன் மோத உள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் வெர்டாஸ்கோவுடன் விளையாடியது குறித்து ஜோகோவிச் கூறுகையில், ‘நான் விளையாடிய கடினமான முதல் சுற்று ஆட்டங்களில் இதுவும் ஒன்று. தோகாவில் எனக்கு எதிராக வெர்டாஸ்கோ எப்படி விளையாடினாரோ அதேபோன்று இன்றும் விளையாடினார். அவர் தரமான வீரர். கடந்த ஆண்டு இங்கே முதல் சுற்றில் நடாலை வீழ்த்தியவர்’ என்றார்.