இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்திகதி வரை நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என்று ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்துடன் கூடிய டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலில் வருவது ஆஸ்திரேலிய ஓபன்.
இந்த ஆண்டுக்கான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி முன்னணி வீரர், வீராங்கனைகள் அங்கு முகாமிட்டு தங்களை பட்டை தீட்டி வருகிறார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வாகை சூடுவதில் ஒலிம்பிக் சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான இங்கிலாந்தின் ஆன்டி முர்ரேவுக்கும், 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சமீபத்தில் கத்தார் ஓபன் இறுதி ஆட்டத்தில் முர்ரேவை வீழ்த்தியதால் ஜோகோவிச் கூடுதல் நம்பிக்கையுடன் காணப்படுகிறார். ஜோகோவிச் முதல் சுற்றில் பெர்னாண்டோ வெர்டஸ்கோவையும் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே முதல் சுற்றில் மார்சென்கோவையும் (உக்ரைன்) சந்திக்கிறார்கள்.
அவுஸ்ரேலியஓபனை 2008, 2011, 2012, 2013, 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ள ஜோகோவிச் இந்த முறையும் வெற்றிக்கனியை பறித்தால், ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை கைப்பற்றியவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார். தற்போது அவுஸ்ரேலிய முன்னாள் வீரர் ராய் எமர்சனுடன் (இவரும் 6 முறை) சமநிலையில் இருக்கிறார். அதே சமயம் 5 முறை இறுதி சுற்றில் தோற்று இருக்கும் முர்ரே, அந்த சோகத்துக்கு முடிவு கட்டி முதல்முறையாக அவுஸ்ரேலிய ஓபனை வெல்வதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார்.
காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள முன்னாள் சாம்பியன்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் ஆகியோரால் முன்பு போல் ஆட முடியவில்லை. அவர்கள் அரைஇறுதி வரை வந்தாலே பெரிய விஷயமாக இருக்கும். அதே சமயம் கனடாவின் மிலோஸ் ராவ்னிக், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா, ஜப்பானின் நிஷிகோரி, குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோரும் கடும் சவால் அளிப்பார்கள் என்று நம்பலாம்.
பெண்கள் பிரிவில் 6 முறை சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் ஆகியோரில் ஒருவர் பட்டம் வெல்லவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. தனது 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு குறி வைத்திருக்கும் 35 வயதான செரீனாவுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அபாயகரமான வீராங்கனைகளில் ஒருவரான சுவிட்சர்லாலந்தின் பெலின்டா பென்சிச்சுடன் அவர் மோத வேண்டி உள்ளது.
இவர்களை தவிர்த்து போலந்தின் அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா, ஸ்பெயினின் கார்பின் முகுருஜா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப், செக்குடியரசின் பிளிஸ்கோவா, சுலோவக்கியாவின் சிபுல்கோவா, டென்மார்க்கின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் களத்தில் வரிந்து கட்டி நிற்பதால், விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
பெண்கள் இரட்டையரில் கடந்த முறை இங்கு சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து பட்டம் வென்ற இந்திய மங்கை சானியா மிர்சா இந்த தடவை செக்குடியரசின் பார்போரா ஸ்டிரிகோவாவுடன் இணைந்து களம் இறங்குகிறார். சானியா- ஸ்டிரிகோவா ஜோடி முதல் சுற்றில் இங்கிலாந்தின் ஜோசிலின் ராவ்- அனாசுமித் இணையை எதிர்கொள்கிறது. ஆண்கள் இரட்டையரில் இந்திய வீரர்கள் லியாண்டர் பெயஸ், பிரேசிலின் ஆந்த்ரே சாவுடனும், ரோகன் போபண்ணா உருகுவேயின் பாப்லோஸ் கியூவாவுடனும் கைகோர்த்துள்ளனர். சென்னை ஓபனில் இறுதிப்போட்டி வரை வந்த புராவ் ராஜா-திவிஜ் சரண் ஜோடியும் களத்தில் இருக்கிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் மகுடம் சூடும் வீரர், வீராங்கனைக்கு ரூ.19 கோடி பரிசுத்தொகையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகள் வழங்கப்படும். இறுதி ஆட்டத்தில் தோற்போருக்கு ரூ.9¾ கோடி கிடைக்கும். இதே போல் இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடி ரூ.3¼ கோடியை பரிசாக பெறலாம்.