அவுஸ்ரேலிய மணமகன் ஈரோடு பெண் திருமணம்!

அவுஸ்ரேலியாவில் காதல்

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி மைதிலி. இவர்களுக்கு மகிமா என்கிற மகளும், ராதேஷ் என்கிற மகனும் உள்ளனர். கிருஷ்ணன் கடந்த 1996-ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடு அடிலேட் நகரத்துக்கு தனது குடும்பத்துடன் சென்று குடியேறினார். அங்கு உள்ள ஒரு கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் மகிமாவும், அவருடைய தம்பி ராதேசும் அவுஸ்ரேலியாவிலேயே தங்களது பள்ளிப்படிப்பை தொடர்ந்தனர்.

மகிமா எம்.எஸ்சி., பி.எச்டி. முடித்துவிட்டு அடிலேட் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கெயித்-கயிலீன் தம்பதியின் மகனான பிரைன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக உருவெடுத்தது. இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு வீட்டினரும் சம்மதம் அளித்ததை தொடர்ந்து கடந்த 2015-ம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது.

இந்து முறைப்படி திருமணம்

இந்தநிலையில் மகிமாவின் திருமணத்தை இந்தியாவில் இந்து மத முறைப்படி நடத்த வேண்டும் என்று பெற்றோர்களும், உறவினர்களும் விருப்பப்பட்டனர். இதுதொடர்பாக பிரைன் குடும்பத்தினருடன் அவர்கள் எடுத்துக்கூறியபோது அவர்களும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மகிமாவின் குடும்பத்தினர் மற்றும் பிரைன் குடும்ப உறவினர்கள் சுமார் 40 பேர் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தனர்.

பிரைன்-மகிமாவின் திருமண விழா இந்து மதம் பிராமணர் முறைப்படி ஈரோடு சோலார் கார்னீஷ் பார்க் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவில் மணமகன் பிரைன் வேட்டி அணிந்தும், மணமகள் மகிமா சேலை அணிந்தும் இருந்தனர். பெங்களூரை சேர்ந்த பூசாரிகள் திருமண யாகம் வளர்த்தனர். அப்போது அவர்கள் செய்த சடங்குகள் குறித்து பிரைன் குடும்பத்தினருக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தனர்.

தமிழக உணவு

பிரைனையும், மகிமாவையும் உறவினர்கள் தூக்கிக்கொள்ள மணமகளும், மணமகனும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். மணமகளின் தந்தை கிருஷ்ணன் மடியில் மகிமா அமர்ந்துகொள்ள பிரைன் நின்றபடி தாலி கட்டினார். பின்னர் அக்னி குண்டத்தை பிரைன்-மகிமா தம்பதியினர் 3 முறை சுற்றி வந்தனர். அவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர்ந்து ஆடி மகிழ்ந்தனர்.

திருமண விருந்தில் லட்டு, இட்லி, பூரி, பொங்கல் என தமிழக உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பிரைன் தனது மனைவி மகிமாவுக்கு உணவு ஊட்டினார். இதேபோல் மகிமாவும் பிரைனுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். மணமகனின் உறவினர்களும் தமிழக உணவை விரும்பி சாப்பிட்டனர். திருமணத்தில் பிரைனின் உறவினர்களும், நண்பர்களும் வேட்டி, சேலைகளை அணிந்து இருந்தனர்.

காதல் அனுபவம்

பிரைனுடன் ஏற்பட்ட காதல் அனுபவம், இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் குறித்து மகிமா கூறியதாவது:-

நான் சிறுவயதில் திருச்சி, ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து உள்ளேன். அதன்பின்னர் அவுஸ்ரேலியா நாட்டிற்கு சென்று அங்கு பள்ளிப்படிப்பை தொடர்ந்தேன். நானும், பிரைனும் 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒன்றாக படித்தோம். ஆனால் பள்ளிப்பருவத்தில் நாங்கள் பழகவில்லை. நான் பி.எச்டி. படிக்கும்போது எனது பள்ளி தோழர், தோழிகளுடன் பழகினேன். அப்போது நாங்கள் சந்திக்கும்போது எங்கள் குழுவில் பிரைனும் இணைந்தார். பிரைன் என்ஜினீயரிங் பட்டம் பெற்று பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நாங்கள் 2 பேரும் நண்பர்களாக பழகினோம். முதல் முதலாக பிரைன் என்னை தனியாக சந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த சந்திப்பின்போது, என்னை விரும்புவதாக அவர் தெரிவித்தார். உடனடியாக நான் சம்மதிக்கவில்லை. சில மாதங்கள் நன்றாக பழகியபிறகு அவருடைய செயல்பாடுகள் என்னை கவர்ந்தது. நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்தோம். நான் பிரைனை காதலிப்பது குறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அப்போது நான் பி.எச்டி. படித்ததால் முதலில் படிப்பில் கவனம் செலுத்தும்படி கூறினார்கள். இருதரப்பு வீட்டினருடைய சம்மதத்துடன் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

தாத்தா-பாட்டி விருப்பம்

இந்தநிலையில் எங்களுக்கு பிராமணர் முறைப்படி திருமணம் நடத்த வேண்டும் என்று எனது தாத்தா நாராயணன், பாட்டி லட்சுமி ஆகியோர் விரும்பினார்கள். இதனால் நாங்கள் திருமணத்திற்கு இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை செய்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எனது தாத்தா நாராயணனும், மார்ச் மாதம் பாட்டி லட்சுமியும் இறந்துவிட்டனர். இருந்தாலும் அவர்களுடைய விருப்பப்படி நாங்கள் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எனது கணவரும் ஒப்புக்கொண்டதால் சிறப்பாக திருமணம் முடிந்தது. ஆனால் எனது திருமணத்தை பார்க்க தாத்தா, பாட்டி இல்லாதது துயரமாக இருக்கிறது.