நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் வீட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடுவெல நீதிமன்றில் மேலதிக மாவட்ட நீதிபதி பிரசாத் அல்விஸ் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது அங்கு மரண விசாரணையின் ஆரம்ப சாட்சி சஷி வீரவன்ச சாட்சியம் வழங்கினார். அவர் நீதிமன்றில் குறிப்பிட்டதாவது,
“உயிரிழந்த லஹிரு எனது மகனின் நல்ல நண்பர். சில காலங்களாக அவர்கள் இருவரும் நெருங்கி பழகினார்கள். பல நாட்கள் மகனுடன் இரவில் எங்கள் வீட்டில் தங்குவார்கள். அதேபோன்று சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் வீட்டிற்கு சென்று உணவு பெற்றுக் கொண்டு வந்தவர் அன்டி நான் செல்லவா என வினவினார்.
அந்த மகனின் கண்கள் வீங்கியிருந்தது. மகன் என்ன இது? என நான் வினவினேன். தூங்காதமையினால் இப்படியாகியிருக்கும் என அவர் கூறினார். அவர்கள் அனைவரும் எனது காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டு மேல் மாடிக்கு சென்றனர். அவர்கள் அதன் பின்னர் படம் ஒன்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் உறங்கியுள்ளனர்.
காலை 9 மணியளவில் எனது மகன் ஓடி வந்து, அம்மா லஹிரு என்ன எழும்பவில்லை என்றார். பைத்தியமா அப்படி எப்படி நடக்கும் என நான் கூறினேன். அம்மா விளையாட்டு அல்ல வந்து பாருங்கள் என்றார்.
நான் லஹிருவின் அம்மா ரூபிக்காவுக்கு தொலைப்பேசி அழைப்பேற்படுத்தி மகன் எழுந்திருக்கவில்லை. சீக்கிரம் வாருங்கள்… என கூறினேன். பின்னர் நான் ரூபிக்கா வந்தவுடன் மேல் மாடிக்கு ஓடினோம். அதன் போது எனது கணவரும் இவ்வாறே உயிரிழந்தார் என ரூபிக்கா அழுதவாறு, எனது மகனுக்கு ஏதோ நடந்து விட்டது என கூறினார்.
லஹிருவின் முகம் மெத்தையின் பக்கம் திரும்பியிருந்தது. அடுத்த பக்கமாக லஹிருவை திருப்பிய போது முகம் வித்தியாசமான நிறத்தில் காணப்பட்டது. வீட்டில் சாரதி இருக்கவில்லை. நான் வாகனத்தில் போட்டுக் கொண்டு ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்து சென்றேன். அதன் போது லஹிரு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் என சஷி வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.
ஹோகந்தர தெற்கு ஹோகந்தர மங்கள மாவத்தை இலக்கம் 71 என விலாசத்தில் வசித்த திஸாநாயக்க முதியன்சலாகே லஹிரு ஜனித் திஸாநாயக்க என்ற 24 வயதுடைய திருமணமாகாத இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கிற்கான அரச பகுப்பாய்வாளர் அறிக்கை இதுவரை கிடைக்காத நிலையில் வழக்கு மீண்டும் 22ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.