ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்பு

அவுஸ்ரேலியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியா நாட்டின் மூவி வேர்ல்ட் பொழுதுபோக்கு பூங்காவைச் சேர்ந்த ரோலர் கோஸ்டரில் 20 பேர் பயணம் செய்தனர். சங்கிலியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் திடீரென நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் தரையிலிருந்து 20 மீட்டர் உயரத்தில் ரோலர் கோஸ்டரின் உள்ளே 20 பேரும் சிக்கிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரோலர் கோஸ்டரில் சிக்கித்தவித்த 20 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

“மீட்கப்பட்ட 20 பேருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அனைவருடனும் நாங்கள் நேரடியாக உரையாடினோம்” என மூவி வேர்ல்ட் பூங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல அவுஸ்ரேலியாவின் மற்றொரு பகுதியில் உள்ள பூங்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.