அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றுள்ளார்.
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், உதவித் தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் மற்றும் தூதரக அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், சிறிலங்காவின் அனைத்தும் மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான நல்லிணக்கம் மற்றும் அமைதி தொடர்பான தனது பார்வையை, இரா.சம்பந்தன் பகிர்ந்து கொண்டார் என்று, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் நல்லிணக்க மற்றும் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான செயற்பாடுகள் முடக்க நிலையை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், சிறிலங்காவின் அமைச்சர் மனோ கணேசனையும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் சந்தித்து நல்லிணக்க முயற்சிகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.