அவுஸ்ரேலியா நாட்டில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து இரட்டை குழந்தைகள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்ரேலியாவில் உள்ள சிட்னி நகரில் 23 மாதம் மட்டுமே ஆன இரட்டை குழந்தைகளுடன் பெற்றோர் வசித்து வந்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள நீச்சல் குளத்திற்கு அருகில் குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். குழந்தைகளின் தாயார் வீட்டிற்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
சில நிமிடங்களுக்கு பிறகு குழந்தைகளின் சத்தம் எதுவும் கேட்காததால் வியப்படைந்த தாயார் அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது, நீச்சல் குளத்தில் இரண்டு குழந்தைகளும் முழ்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறியுள்ளார்.
தாயாரின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துச் சென்று குழந்தைகளை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால், குழந்தைகள் இருவரும் சுயநினைவின்றி இருந்ததால் அவர்களை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக் கொண்டு சென்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் இருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்துள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக ஆண் குழந்தை அன்றே உயிரிழந்துள்ளது.
இச்செய்தியை கேட்டு தாயார் கதறி அழுதுள்ளார். மேலும், மற்றொரு பெண் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்களாக சிகிச்சை அளித்த நிலையிலும் இரண்டாவது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
இரண்டு குழந்தைகளையும் இழந்துள்ள பெற்றோர் இருவரும் இதுவரை சோகத்தில் இருந்து மீளவில்லை. பெற்றோரின் எதிர்கால தேவைக்காக அப்பகுதி மக்கள் உயிரிழந்த குழந்தைகளின் பெயர்களில் சுமார் 25,000 டொலர் வரை நிதி வசூல் செய்துள்ளனர்.
மேலும், குழந்தைகள் இருவரு உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.