“புதிய அரசியலமைப்பு உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது“ என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன், நேற்று (08) தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிகளுடன் ஆராயும் முழுநாள் கூட்டம், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டம், நேற்று மாலை நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம் சம்பந்தமாக நாள் முழுவதும் கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தோம். அதில் விசேடமாக, ஏற்கெனவே வெளியிடப்பட்டிருக்கின்ற உப குழுக்களுடைய அறிக்கைகள், அத்தோடு வெளியிடப்படவிருந்த நடவடிக்கைக் குழுவினுடைய இடைக்கால அறிக்கை, அது தாமதமாக இருந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பிலும் கூடிப் பேசியிருந்தோம்.
இந்த முயற்சி, புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கமானது, துரிதமாக இடம்பெறவேண்டும். புதிய அரசியமைப்பு உருவாக்கத்தின் மூலமாக, 70 வருடகாலமாகப் புரையோடியிருக்கின்ற தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவேண்டும் என்பதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் உறுதியாக இருக்கிறது. அதன் காரணமாக, எங்களுடைய முழுமையான பங்களிப்பையும் இதுவரைகாலமும் இந்த முயற்சிக்கு நாங்கள் செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
அரசாங்கமும் மற்றைய கட்சிகளும் கூட பூரணமாக இதுவரை காலமும் ஒத்துழைத்தது போல, தொடர்ச்சியாக ஒத்துழைத்து, காலதாமதம் இல்லாமல் இடைக்கால அறிக்கையையும் புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கான வரைவையும் அரசியலமைப்புப் பேரவைக்கு முன்பாக கொண்டுவர வேண்டும் என நம்பியிருக்கிறோம்.” என்றார்.
இக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் தலைவரும் எம்.பியுமான மாவை சோனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவரும் எம்.பியுமான தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன், எஸ். வியாழேந்திரன், எஸ். யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.