அவுஸ்ரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்

இந்திய தொடரின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று வார்னர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியா அணி இலங்கை, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரை இழந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை 3-0 எனக் கைப்பற்றியது. தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டெஸ்டின் வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக அந்த அணி நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது.

இதனால் அவுஸ்ரேலியா புத்துணர்ச்சி பெற்றுள்ளது. இருந்தாலும் ஆசிய மண்ணில் அந்த அணி பெரிய வெற்றி பெற்றதில்லை. 19 போட்டிகளில் தோல்வியை சந்திக்காத இந்தியாவை நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சந்திக்க இருக்கிறது. இந்த தொடர் அடுத்த மாதம் 23-ந்திகதி தொடங்குகிறது.

இந்த தொடரில் ஆஸ்திரேலியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று அந்த அணியின் துணை கேப்டன் வார்னர் கூறியுள்ளார்.

இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘சமீபத்தில் முடிவடைந்த இந்தியா – இங்கிலாந்து தொடரை நாம் பார்த்தோம் என்றால், இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்பது தெரியும். சிறப்பாக பேட்டி செய்து ஸ்கோர் போர்டில் அதிக ரன்களை காண்பித்தார்கள்.

இந்தியா அவர்களை விட சற்று கூடுதல் ரன்கள் சேர்த்தார்கள். ஆகவே, எங்கள் அணி சில நேர்மறையாக விஷயத்தை வெளிக்கொண்டு வந்து நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முயற்சிப்போம்.

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் 20 விக்கெட்டுக்களை வீழ்த்த வேண்டும். நாங்கள் அதை நோக்கி செல்வோம். பேட்டிங், பந்து வீச்சு, அல்லது கேட்ச் பிடித்தல் எதுவாக இருந்தாலும் எந்த சாக்குபோக்கும் சொல்லக்கூடாது. இந்திய தொடருக்கான தயார் நிலை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது’’ என்றார்.