இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவுஸ்ரேலிய அணியின் வீரர்களுக்கு கேப்டன் ஸ்மித் எச்சரித்துள்ளார்.
அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கான இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 3-0 எனக் கைப்பற்றியுள்ளது.
இந்த வெற்றிக்குப் பிறகு அவுஸ்ரேலியா அணியின் கப்டன் ஸ்மித் வீர்ரகளுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் இனி வரப்போகும் இந்திய தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இந்தியா தொடரில் இந்த அணியின் முக்கிய குழுதான் பங்கேற்க போகிறது. எங்கள் அணியின் சிலர்தான் இதற்கு முன் இந்திய மண்ணில் விளையாடியுள்ளனர். இந்திய மண்ணில் அவர்களை எதிர்த்து விளையாடுவது மிகவும் கடினம் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்கள் மிகவும் சிறந்த அணி.
இந்திய தொடருக்கான அணியில் மேலும் சில வீரர்களை சேர்க்க வேண்டும். இது நீட்டிக்கப்பட்ட அணியாக இருக்கும். இந்திய அணிக்கு சரியான வகையில் ஈடுகொடுத்து விளையாட வேண்டுமென்றால், நம்பமுடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பெரும்பாலான வீர்ரகள் அனுபவம் இல்லாதவர்கள். அவர்களுக்கு இது கடினமான ஒன்றாக இருக்கப்போகிறது.
இந்திய ஆடுகளம் அவுஸ்ரேலியாவில் உள்ள ஆடுகளம் போன்று இருக்கப்போவதில்லை. இதனால் வீரர்கள் இந்திய ஆடுகளத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக விளையாடும் வழியை தேடிக்கொள்ளவேண்டும்’’ என்றார்.
அவுஸ்ரேலியா அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுகிறது. இரு அணிகளுக்கிடையிலான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அடுத்த மாதம் 21-ம்திகதி தொடங்குகிறது.