சிட்னியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா 538 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்ததை தொடர்ந்து, தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (58 ரன்), யூனிஸ்கான் (64 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று மழை காரணமாக உணவு இடைவேளைக்கு பிறகு ஆட்டம் நடந்தது. தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் அணி ஆட்ட நேர இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 71 ரன்களில் ரன்-அவுட் ஆனார். தனது 34-வது சதத்தை பூர்த்தி செய்த யூனிஸ்கான் 136 ரன்களுடன் (14 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருக்கிறார்.
39 வயதான யூனிஸ்கானுக்கு அவுஸ்ரேலிய மண்ணில் இது தான் முதல் டெஸ்ட் சதமாகும். இதையும் சேர்த்து இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 11 நாடுகளில் டெஸ்டில் யூனிஸ்கான் சதம் கண்டிருக்கிறார். இதன் மூலம் 11 நாடுகளில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை யூனிஸ்கான் பெற்றார். இந்த வகையில் 2-வது இடத்தில் உள்ள ராகுல் டிராவிட் (இந்தியா), முகமது யூசுப் (பாகிஸ்தான்), சங்கக்கரா, ஜெயவர்த்தனே (இருவரும் இலங்கை) ஆகியோர் தலா 10 நாடுகளில் சதத்தை பதிவு செய்துள்ளனர்.
‘பாலோ-ஆனை’ தவிர்க்க பாகிஸ்தான் அணி மேலும் 68 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.