நாவற்குழி சிங்களவரிற்கும் பொருத்துவீடுகள்?

யாழ்.நகரின் நுழைவாயிலான நாவற்குழியில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடியேற்றவாசிகளிற்கும் மீள்குடியேற்ற அமைச்சின் வீடுகள் கிட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுமார் 340 வரையிலான சிங்கள குடியேற்றவாசிகள் மஹிந்த ஆட்சி காலத்தில் வாகனங்களில் ஏற்றிவரப்பட்டு வீடமைப்பு அதிகாரசபையின் அனுசரணையுடன் நாவற்குழியில் குடியமர்த்தப்பட்டனர்.

பின்னராக சிங்கள மதவாத அமைப்புக்களினால் படிப்படியாக நிரந்தர கல்வீடுகள் அமைத்து வழங்கப்பட்டதுடன் பாரிய விகாரையும் அமைத்து குடியேற்றதிட்டம் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விசேட அதிரடிப்படை மற்றும் படையினர் உடைய இரு முகாம்கள் அப்பகுதியினுள் அமைக்கப்பட்டு 24 மணிநேர பாதுகாப்பும் வழங்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் நிரந்தர வீடுகள் கிட்டியிராத எஞ்சிய குடியேற்றவாசிகளிற்கே வடகிழக்கில் யுத்த பாதிப்பிற்குள்ளாக தமிழ் மக்களிற்கென ஒதுக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தின் கீழ் பொருத்துவீடுகளை அமைத்துவழங்க ரணில் அரசு முன்வந்துள்ளது.

இதன் பிரகாரம் தற்போது சிங்கள குடியேற்றவாசிகளில் பொருத்துவீடுகள் தேவையானோர் விபரங்கள் கோரி பெறப்பட்டிருப்பதாகவும் முதல்கட்டமாக அவர்களிற்கே பொருத்துவீடுகள் அமைத்து வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.