“அன்று சுஜாதா சொன்னது, இன்று நிஜமாகிறது!’’ – கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து…. வளர்ந்து வரும் சினிமா இளைஞர்களில் நம்பிக்கையானவர்.  கவிதைகளில் தனது தடத்தை பதித்தவர்… நாவலிலும் கவனிக்க வைத்தார். நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் மிளிர்ந்தார். தற்போது பல படங்களுக்கு திரைக்கதை அமைப்பது, வசனம் எழுதுவது, பாடல் எழுதுவது என கபிலன் செம பிஸி.

தற்போது டி.ஆர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் ‘கவண்’ படத்திற்கு எழுத்தாளர் சுபா மற்றும் இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் இணைந்து கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியிருக்கிறார். இந்த படத்தில் மூன்று பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

“இயக்குநர் கே.வி.ஆனந்த்துடன் வேலை செய்யும் அனுபவம் எப்படி உள்ளது?”

“கே.வி சார், கூட படம் முழுக்க டிராவல் பண்ணது நல்ல அனுபவமா இருந்தது. கே.வி சார் ஒரு போட்டோ ஜெனர்னலிஸ்டாக அவருடைய கேரியரை தொடங்கி, டாக்குமென்டரி படங்கள் எடுத்து, சினிமாவுக்குள்  ஒளிப்பதிவாளராக நுழைந்து இயக்குநர் ஆனவர். அவருடைய வாழ்வில் நிறைய படி நிலைகளை கடந்து வந்திருக்கிறார். அவர் பார்க்காத உலகம் இல்லை. அவருடன் இருந்த இந்த ஒன்றரை வருடத்தில், நானும் அவற்றினுள் சிலவற்றை கற்றுக்கொண்டேன். வளரும் இயக்குநர்களுக்கும் அவரிடமிருந்து கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய  உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.”

“டி.ஆர், விஜய் சேதுபதி ஷுட்டிங் ஸ்பாட்ல என்ன சொன்னாங்க?”

“நாங்க டிஸ்கஷன் செய்யும்போது விஜய் சேதுபதிக்கு இந்த சீன் எல்லாம் நடிக்கறத்துக்கு கஷ்டமாக இருக்குமோ என நினைத்தோம். ஆனால், நாங்க நினைத்தை விட, விஜய்சேதிபதி ஒரே டேக்ல அந்த சீன் எல்லாம் நடித்து முடித்து போய்ட்டே இருந்தார். ஒரு நடிகரா அவர் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கார் என்பதை நான் அருகில் இருந்து பார்க்க முடிந்தது. டி.ஆர் சார் படத்துக்கு நிறைய எனர்ஜி கொடுத்திருக்கார். அதற்கு ‘ஹாப்பி நியூ இயர்’ பாடல் ஒரு சின்ன உதாரணம். டி.ஆர் சாருக்கு வசனம் எழுதுவதும் ஒரு இனிய அனுபவமாக தான் இருந்தது.”

“பல இளம் இயக்குநர்களுடன் வேலை செய்யும் அனுபவம் எப்படி உள்ளது?”

“மூத்தத் தலைமுறையோடு பணிபுரிகிற அதே சமயம், என்னைப் போல் வளர்ந்து வரும் தலைமுறையோடும் கை கோர்த்திருக்கிறேன். கெளதம்மேனன் அவர்களின் உதவி இயக்குநர் மனு ஆனந்த், மிஷ்கின் அவர்களின் குழுவில் இருந்த பிரியதர்ஷனி, தரணி அவர்களிடம் பணிபுரிந்த ஹரிபாஸ்கர் போன்ற அறிமுக இயக்குநர்களுக்கு திரைக்கதை வசனம் எழுதும்போதும் – இந்திரஜித் படத்திற்காக கிருஷ்ணபிரசாத், மதியால் வெல் படத்திற்காக பாலமுரளி போன்ற பல புதுமுக இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போதும் அவர்களின் கண்கள் வழி என் உலகம் விரிகிறது.”

“கவிதை எழுதுவது,  நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுப்பது, திரைக்கதை அமைப்பது என பல கட்டங்களில் இயங்கி வருகிறீர்கள். அதில்,  உங்களுக்கு நெருக்கமானது எது?”

“ஒரு மரம், பழம் கொடுக்கிறது. பூ கொடுக்கிறது. நல்ல இலைகளை தருகிறது. அது அந்த மரத்தோட வேற வேற உறுப்புகளாக இருக்கலாம். ஆனா, அந்த மரத்தின் வேர் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அதுபோல என்னுடைய வேராக நான் நினைப்பது கவிதை. எட்டு வயதில் இருந்தே கவிதை எழுத ஆரம்பித்தேன்.  18-வது வயதில் என்னுடைய முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டேன். மேலும் பல கவிதைகள் எழுதி அதையும் புத்தகமாக வெளியிட்டேன்.  அதுக்கு பிறகு நாவல் என, மேலும் பல வடிவங்களுக்குள் சென்றேன். என்னுடைய நாவல்கள் ஆகட்டும், திரைக்கதையாகட்டும், வசனமாகட்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாகட்டும்…. எந்த ஒரு கிரியேட்டிவ் வேலையாக இருந்தாலும் சரி… அதில், என்னை அறியாமல் கவித்துவம் வரும். கவிதை எனக்கு பிடிக்கும்னு சொல்றத விட அதை என் கூட பிறந்த ஒரு மொழி வடிவமா பார்க்கிறேன்.”

“எப்படி பல துறைகளிலும் உங்க தகுதியை வளர்த்துக்கொண்டீர்கள்?”

“தகுதியை இரண்டு விதமாக பிரித்து பார்க்கிறேன். ஒன்று கல்வி மூலமாக கிடைக்கும் தகுதி. இன்னொன்று சுய அனுபவம் மூலமாக கிடைப்பது. நான் பொறியியலில்  ‘இன்பர்மேசன் டெக்னாலஜி’ படித்தேன். இரண்டு  வருடம் ஐ.டி துறையில் வேலை செய்தேன். ஸ்ட்ரக்ச்சர் மற்றும் லாஜிக் – இது இரண்டும்தான் பொறியியல் கல்வியின் அடிப்படை. இந்த அடிப்படை நான் கவிதை எழுதும்போதும் சரி, நாவல் எழுதும்போதும் சரி… பயன்படுகிறது. அதன்பின்  ஜெர்னலிசம் கல்வி. என்னை நானே புதுப்பிக்க அது உதவியது. என்னை நான் திட்டமிட்டு தகுதி படித்துக்கொள்ளவில்லை. அது காலப்போக்கில் தானாக நடந்துகொண்டே வந்திருக்கிறது. நடந்துக்கொண்டு இருக்கிறது.”

“கவிதை எழுதவதற்கும், நாவல் எழுதுவதற்கும் அடிப்படை தேவைகள் என்ன? ஒரு எழுத்தாளனாக சொல்லுங்கள்?”

“கவிதை எழுதுவதற்கு உணர்வு தேவை. நாவல், சிறுகதை, வசனம் எழுதுவதற்கு உலக நிகழ்வுகள் பற்றிய அறிமுகமும் மனித இயல்பு குறித்த அனுபவமும் அவசியம்.”

கபிலன் வைரமுத்து

“இயக்குநராகும் ஆசை இருக்கிறதா?”

“கண்டிப்பா இல்லை. எழுத்தையே தொழிலாகவும், கலையாகவும் பார்க்கிறேன். எழுத்து பணிக்கு பன்முகம் தேவை. ஓர் எழுத்தாளர் கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். அல்லது திரைக்கதை, வசனம் மட்டும் எழுதலாம். அல்லது வசனம் மட்டும் எழுதலாம். ’இயக்குநர்களுக்கும் – இசையமைப்பாளர்களுக்கும் – பாடலாசிரியர்களுக்கும் ஒளிப்பதிவாளர்களுக்கும் இருப்பது போல, தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கும் தெளிவான பணிமுகம் வேண்டும். காலப்போக்கில் உருவாகும்’ – இது பல ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்கள் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள். அவர் சொன்ன மாற்றம் இப்போது நிஜமாக, நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த மாற்றத்திற்குள் என்னை பொருத்திப் பார்க்க முயற்சிக்கிறேன்.”

“நீங்கள் எழுதிய ‘மெய்நிகரி’ என்ற நாவல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பாடப்பொருளாக கற்பிக்கப்பட்டதாமே?”  

“ஆமாம். நான் தொலைக்காட்சியில் பணியாற்றிய போது ஏற்பட்ட சில அனுபவங்களும், என் ஊடக நண்பர்களின் சில அனுபவங்களையும் சேர்த்து தொகுத்து இந்த நாவல் எழுதி இருந்தேன். ஒரு தமிழ் நாவல் இதுவரை தொடாத ஒரு களமாக அது அமைந்தது. ஊடகத்திற்குள் வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு மெய்நிகரி ஒரு கையேடாகவும்  இருக்க வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. இந்த நாவலுக்குள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி எப்படி உருவாகிறது? அரங்கம் எப்படி இயங்குகிறதுனு நிறைய அடிப்படை தகவல்களை கதையாக அமைத்திருந்தேன். அதை சிங்கப்பூர் பல்கலைகழகத்தில், தற்கால தமிழ் இலக்கியம் என்ற அடிப்படையில் பாடமாக கற்பிக்கப்பட்டது என்ற செய்தி மகிழ்ச்சியாக இருந்தது. எந்த நோக்கத்திற்காக நான் எழுதினேனோ அந்த நோக்கம் நிறைவேறும்போது மகிழ்ச்சி தானே.”

“உங்க அப்பா வைரமுத்து… நீங்கள் எழுதும் நாவல், கவிதை தொகுப்பை எல்லாம் படித்துவிட்டு என்ன சொல்வார்?”

“என்னுடைய எல்லா புத்தகங்களின் முதல் வாசகரே என் அப்பாதான். என் கவிதை தொகுப்பு, நாவல் என அனைத்தையும் முதலில் படித்துவிட்டு அவரது கருத்தைச் சொல்வார்.  ‘மெய்நிகரி’ நாவலை படித்துவிட்டு, ‘உனக்குனு  ஒரு மொழி இருக்கும். அந்த மொழியில் இருந்து இதை எழுதாமல் வேற மாதிரி எழுதி இருக்க’னு கவனித்துச் சொன்னார். ‘மெய்நிகரி’ நாவலில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான். அவர்களுடைய நடை… தமிழும், ஆங்கிலமும் கலந்த மொழியில் தான் இருக்கும். அதை அப்படியே எழுதி இருந்தேன். இதை அறிந்து கவனித்துச் சொன்னார். என் எல்லா முயற்சிகளுக்குமே அப்பா ஊக்கப்படுத்துவார். உற்சாகம் ஊட்டுவார்.”

“உங்கள் மனைவி ரம்யா, உங்களது எழுத்தை ரசிப்பாரா? 

“வேறுவழியில்லை. ரசித்துதான் ஆகவேண்டும். (சிரிக்கிறார்) அவர் ஒரு பிஸியான மகப்பேறு மருத்துவர். மனித உயிர்களை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தும் உன்னதமான அவரது பணிகளுடைக்கிடையே என் எழுத்தையும் படிக்க நேரம் ஒதுக்குவார். பிடித்தால் புன்னகை செய்வார். இல்லையென்றால் கொஞ்சம் குறைவாக புன்னகை செய்வார்.”