அவுஸ்ரேலியாவில் புத்தாண்டு விழாவை கொண்டாடிய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கி 80-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
அவுஸ்ரேலியா நாட்டின் தென்கிழக்கு பகுதியிலுள்ள விக்டோரியா மாநிலத்தில் உள்ள லோர்னே நகரின் கிராண்ட் கலையரங்கத்தில் புத்தாண்டையொட்டி, இசை மற்றும் கலைவிழா நிகழ்ச்சிகள் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு நடைபெற்றன.
இவ்விழாவில் பங்கேற்க ஆயிரக்கணக்கான மக்கள் பெரும்திரளாக கூடியிருந்தனர். அவுஸ்ரேலியாவின் பிரபல இசைக்குழுவினரின் நிகழ்ச்சி முடிந்தவுடன், அருகாமையில் உள்ள மற்றொரு மேடையில் பிரிட்டன் நாட்டின் மிகப்பிரபலமான ‘லண்டன் கிரம்மர்’ குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.
அப்போது ஆர்வமிகுதியால் கூட்டத்தில் இருந்த பலர் மேடைக்கு நெருக்கமாக செல்ல முயன்றனர். இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளினால் பலர் தலைகுப்புற கீழே விழுந்தனர். விழுந்தவர்கள் மீது சிலர் ஏறிச்சென்று மேடையை நெருங்க முந்தியடித்து சென்றனர்.
கூச்சல்,குழப்பத்துடன் அங்கு கலவரச்சூழல் உருவானது. கூட்டத்தில் சிக்கி மிதிபட்ட 80-க்கும் அதிகமானவர்கள் ரத்தகாயம் மற்றும் எலும்புமுறிவு ஏற்பட்டு வலியால் கதறித் துடித்தனர்.
விரைந்துவந்த மீட்புப் படையினர் கூட்டத்தை கலைத்து, மிதிபட்டு மயங்கியநிலையில் கிடந்த சிலரை முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.