கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

இந்திய இலங்கை மீனவர்கள் தொழிலின் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அனுமதிக்கப்பட்ட கச்சதீவில் இலங்கை கடற்படை அமைத்துள்ள தளத்தை பாதுகாக்க நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அவ்வகையில் வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. இங்கு துறைமுகம் இன்மையினால் கடற்படையினரின் பாரிய மிதவை படகு மூலம் பக்தர்கள் ஏற்றி இறக்கப்படுவது சிரமமான ஒன்றாக காணப்படுகிறது. இதனையடுத்து, இப்பகுதியில் மிதக்கும் துறைமுகம் ஒன்றினை அமைப்பதற்கு கடற்படையினரின் உதவியை பெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய புதிய கட்டட கையளிப்பின் போது தமது கடற்படை தளப்பகுதியில் வெளியார் செல்ல அனுமதி மறுத்த கடற்படை அதனை இரகசியமாக பேண முற்பட்டிருந்தது.

எனினும் யுத்த காலத்திளில் சிலவேளை அங்கு கடற்படை தளம் தேவையாக இருந்திருக்கலாம். தற்போதும் கச்சதீவில் அதனை பேணுவது இருநாட்டு மீனவர்களிற்கும் தலையிடியை தருமென வடமாகாண மீனவ சம்மேளன தலைவர் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.