அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் ஒரு பிரிவான, ‘ஈகிள் வொர்க்ஸ் லேபரட்டரீஸ்’ என்ற நிறுவனம், அண்மையில், மின் காந்தவிசை மூலம் உந்து சக்தி தரும் இயந்திரம் பற்றிய ஒரு ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளது. ‘எம் டிரைவ்’ என்று அழைக்கப்படும் அந்த இயந்திரம், கூம்பு வடிவில் உள்ள ஒரு தாமிர கலனைக் கொண்டது.
வெற்றிடத்தில் இந்தக் கலனை வைத்து, அதனுள் நுண்ணலைகளை மோத விடுவதால், மிகச் சிறிய அளவில் உந்து சக்தி கிடைப்பதாக ஈகிள் வொர்க்சின் ஆய்வு தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த ரோஜர் சாயர் என்ற பொறியாளர், 2006ல் எம் டிரைவ் தொழில்நுட்பத்தை முன்வைத்தார். ஆனால், ‘அவரது இயந்திரம் ஏட்டளவில் தான் சரிவரும்; இயற்பியலின் அடிப்படை விதிகளுக்கு உட்படாமல் அது நடைமுறையில் இயங்க முடியாது’ என்று, விஞ்ஞான உலகில் பலர் கருதினர். அவர்களில் ஒரு தரப்பினர், ரோஜர் சாயரை வெளிப்படையாகவே ஏளனமும் செய்தனர்.
விண்வெளி பயணத்திற்கான செலவைக் குறைக்க, எரிபொருள் இல்லாமலேயே உந்து சக்தி தரும் இயந்திரங்களைப் பற்றி பல ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுள், சூரிய ஒளி பாய்மரம், லேசர் உந்து இயந்திரம், போட்டான் ராக்கெட் ஆகியவை போல, எம்.டிரைவின் மின்காந்த சக்தி இயந்திரமும் அடங்கும்.இப்போது, நாசாவின் குடையின் கீழ் உள் ஈகிள் வொர்க்சே, தன் ஆய்வில், ‘வெற்றிடத்தில் சோதித்தபோது, 1 கிலோவாட் மின்சாரத்திற்கு, எம் டிரைவ் இயந்திரம், 1.2 மில்லி நியூட்டன் உந்து சக்தியை தரும்’ என்று சொல்லிஇருப்பதால், அதன் கண்டுபிடிப்பாளரான ரோஜர் சாயர் உற்சாகம் அடைந்து இருக்கிறார்.
செலவு குறைந்த விண்வெளி பயணத்திற்கு, எதிர்காலத்தில் எம் டிரைவே ஆதாரமாக இருக்கும் என்று அழுத்தமாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ரோஜர்.