மெல்போர்ன் டெஸ்டில் கடைசி நாளில் அதிரடி திருப்பமாக பாகிஸ்தானை 163 ரன்களில் சுருட்டி அவுஸ்ரேலியா இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது.
அவுஸ்ரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் கடந்த 26-ந்திகதி தொடங்கியது. ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்பட்ட இந்த டெஸ்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 443 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.
அவுஸ்ரேலிய அணி புத்தாண்டு பரிசாக இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றியை பெற்றது.
ஏற்கனவே முதலாவது டெஸ்டிலும் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றிருந்ததால் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
* உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் அவுஸ்ரேலியா தனது அதிகபட்ச ரன்களை (8-624 ரன்) நேற்று பதிவு செய்தது. இதற்கு முன்பு 1937-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 604 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இதே போல் 1979-80-ம் ஆண்டு பைசலாபாத்தில் நடந்த டெஸ்டில் 617 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தானுக்கு எதிராக அவுஸ்ரேலியாவின் சிறந்த ஸ்கோராக இதுவரை இருந்தது. அதையும் அவுஸ்ரேலியா இப்போது கடந்துள்ளது.
* மெல்போர்ன் மைதானத்தில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையை அவுஸ்ரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (7 சிக்சர்) படைத்துள்ளார். இதற்கு முன்பு 2005-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் 6 சிக்சர் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் 3-ந்தேதி தொடங்குகிறது.