போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த டாப் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள்

திரைப்படங்களின் வசூல் அடிப்படையில் போர்ப்ஸ் வணிக பத்திரிகை தயாரித்து இருக்கும் புதிய பட்டியல் ஒன்றில் 10 ஹாலிவுட் நட்சத்திரங்கள் இடம் பிடித்துள்ளனர்.

போர்ப்ஸ் வணிக பத்திரிகை, 2016-ஆம் ஆண்டில், சர்வதேச அளவில் வசூலில் சாதனை படைத்த திரைப்படங்களுக்கு பின்புலமாக இருந்த முன்னணி 10 ஹாலிவுட் நடிகர், நடிகைகள் அடங்கிய பட்டியல் ஒன்றை இப்போது வெளியிட்டுள்ளது.

நடிகை ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடிப்பில் வெளியான கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட திரைப்படங்கள் 120 கோடி டாலர் வசூலை அள்ளி இருக்கிறது. இவர் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.

அடுத்து கிரிஸ் இவான்ஸ் மற்றும் ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகிய நடிகர்கள் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளனர். இவர்கள் நடித்த திரைப்படங்கள் தலா 115 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. நடிகை மார்காட் ரோபீ நடித்த படங்கள் 110 கோடி டாலரை அள்ளி இருக்கின்றன. எமி ஆடம்ஸ் படங்கள் 104 கோடி டாலர் ஈட்டி உள்ளன. இதனையடுத்து போர்ப்ஸ் பட்டியலில் இவர்கள் நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பென்அஃப்லெக் நடித்து வெளிவந்த படங்கள் 102 கோடி டாலர் வசூல் செய்துள்ளன. இவர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். நடிகர் ஹென்றி கவில் ஏழாவது இடத்தில் உள்ளார். இவரது திரைப்படங்கள் 87 கோடி டாலர் வசூல் செய்திருக்கின்றன.

ரயன் ரினால்ட்ஸ் நடித்த படங்களின் டிக்கெட் விற்பனை 82 கோடி டாலரை எட்டியதை அடுத்து போர்ப்ஸ் பட்டியலில் எட்டாவது இடம் பிடித்துள்ளார். பெலிசிட்டி ஜோன்ஸ் படங்கள் 80 கோடி டாலரும், வில்ஸ்மித் படங்கள் 77 கோடி டாலரும் சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. இவர்கள் இருவரும் முறையே ஒன்பது மற்றும் பத்தாவது இடங்களில் உள்ளனர்.

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2016 செப்டம்பர் வரையிலான ஓராண்டில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில், வருவாய் அடிப்படையில் (ரூ.270 கோடி) பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்தில் உள்ளார்.