சாதனை படைத்த 102 வயதான விஞ்ஞானி

அவுஸ்ரேலியா நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் தன்னுடைய 102 வயதிலும் தொடர்ந்து பல்கலைக்கழக பணியாற்ற வேண்டும் என்ற விருப்பத்தை கடுமையான போராட்டத்திற்கு பிறகு நிறைவேற்றியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் Edith Cowan என்ற பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இந்த பல்கலைக்கழகத்தில் டேவிட் குட்டால் என்ற 102 வயதான விஞ்ஞானி ஒருவர் சூழலியல் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் டேவிட் லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலமாக கடந்த 1941ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், அவுஸ்ரேலியா பல்கலைக்கழகத்தில் ஊதியம் எதுவும் பெறாமல் கெளரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

பல்கலைக்கழகத்தில் இருந்து இவரது வீடு நீண்ட தொலைவு இருப்பதால் தினமும் 90 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்கிறார்.

விஞ்ஞானியின் வயது முதிர்ச்சியால் கவலை அடைந்த நிர்வாகம் அவரை வீட்டில் இருந்து தனது ஆராய்ச்சியை தொடருமாரு கேட்டுக்கொண்டது.

ஆனால், இதனை விஞ்ஞானி ஏற்றுக்கொள்ளாமல் கடுமையாக போராடி வந்துள்ளார்.

இந்நிலையில், விஞ்ஞானியின் தீவிர ஆராய்ச்சிப் பற்றுதலை பார்த்த பல்கலைக்கழகம் அவரது வீட்டிற்கு அருகிலேயே ஒரு சிறப்பு அலுவலகத்தை அமைத்து கொடுத்துள்ளது.

இதனை விஞ்ஞானியும் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசியபோது ‘பல்கலைக்கழகத்திற்கு நேரில் செல்ல முடியாதது வருத்தமளிக்கிறது. எனினும், எனது ஆராய்ச்சியை தொடர பல்கலைக்கழகம் ஒரு தனி அலுவலகத்தை உருவாக்கி கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது’ என உற்சாகம் தெரிவித்துள்ளார்.