மார்க்சியவாதி, தமிழ் தேசிய இன உரிமைக்குக் குரல் கொடுப்பவர், இலக்கியவாதி எனும் பல்வேறு முகங்களைக் கொண்டவர் கவிஞர் இன்குலாப்.
இடதுசாரிகளால் மக்கள் கவிஞர் என அன்போடு அழைக்கப்பட்டவர். சமீபத்தில் நிகழ்ந்த அவர் மறைவின் வலி இன்னும் மாறவில்லை.வாழ்நாள் முழுவதும் புரட்சிகர இயக்கங்களோடு இயங்கிய இன்குலாப்பின் கவிதைகளில் அவரது பெயரைப் போலவே கனல் தெறிக்கும். ஆனால் தனது குடும்பத்தில் அவர் ஒரு மென்மையான அப்பாவாக இருந்திருக்கிறார் என்பது அவரது மகள் ஆமினாவிடம் நாம் உரையாடிய போது தெரிந்தது. ஆமினாவிடம் பேசியதிலிருந்து:
அப்பா கண்டிப்பான அப்பாவா… அன்பான மென்மையான அப்பாவா?
அன்பான கண்டிப்புடைய அப்பா……..நான் பிறக்கும் வரையில் அப்பாவுக்கு கடுமையான கோபக்காரர் என்றுதான் பெயர். அண்ணன்கள் செல்வம், இன்குலாப் (இந்தப் பெயரில்தான் இன்குலாப் கவிதைகள் எழுதினார். அவரது சொந்தப் பெயர் சாகுல் அமீது) இருவருமே அப்பாவுக்கு பயப்படுவார்களாம். நான் பிறந்த பிறகுதான் அப்பாவுக்கு கோபம் குறைந்ததாக அம்மா சொல்வார்கள்.
குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க கவிஞருக்கு வாய்ப்பு இருந்ததா?
அப்பா வீட்டில் இருக்கும் போது கூட, தோழர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். சாயங்கால நேரத்தில் நான் பள்ளி விட்டு வரும் போது, அப்பா அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார். உரையாடலை முடித்து விட்டு வந்த உடன் நான் மடை திறந்த வெள்ளமென அப்பாவுடன் பேச ஆரம்பித்து விடுவேன். அவரிடம் பேச எனக்கு நிறைய இருக்கும். 99ல் அப்பாவின் தமிழறிஞர் கோட்டாவில்தான் எனக்கு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. நான் கல்லூரிக்குச் சென்ற போது அப்பா அமெரிக்காவில் தமிழ்ச் சங்கங்களின் அழைப்பில் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். என்னோடு இல்லை.
அப்பாவுடைய அரசியலால் அவருக்கு பிரச்சனை ஏதாவது வந்துடுமோன்னு நீங்களோ குடும்பத்துல இருக்கிறவங்களோ பயந்ததுண்டா…
அப்பா போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். காவல்துறை கைது நடந்திருக்கிறது. அப்பாவை கைது செய்து கூட்டிட்டுப் போகும் போது என்ன செய்வாங்களோன்னு ஆரம்பத்தில் பயம் இருந்தது. ஆனா பிள்ளைகள் நாங்கள் வளர்ந்த பிறகு அதெல்லாம் இல்லை.
அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன…..
எங்களுக்கான முடிவுகளை நாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம். தேர்தல் நேரங்களில் அப்பாவின் விமர்சனத்தைப் பொருத்துத்தான் நான் ஓட்டுப் போடுவேன்..
அப்பா தன்னோட கருத்துக்களை எப்பவாவது உங்க மேல திணிக்கிறதா நெனச்சிருக்கீங்களா…
அதிகாரத்தை எந்த சூழ்நிலையிலும் அவர் ஆதரிச்சதில்லை. அப்பா என்கிற முறையில் அவர் அதிகாரம் செலுத்தியதில்லை. அவர் கடவுள் மறுப்பாளர். ஆனால் உனக்கு விருப்பமிருக்கா தொழுதுக்கோ, பவுத்த மதத்தை பாலோ பண்ணனுமா பண்ணிக்கோ, கோவிலுக்கு போக விரும்புகிறாயா போ.. சர்ச்சுக்குப் போக விரும்புகிறாயா.. போ… ஆனால் உனது நம்பிக்கை என் தலையில் ஏறி உட்கார்ந்தால் அதை எதிர்ப்பேன் என்று சொல்வார் அப்பா. வாழ்க்கைத் துணை தேடுவதிலும் பிள்ளைகளுக்கு உரிமை இருக்கிறது என்று அப்பா கூறுவார்.
இஸ்லாமியப் பின்னணி கொண்டது உங்கள் குடும்பம். அப்பா மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அதனால் உங்கள் உறவினர்கள் மத்தியில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் ஏதாவது…
பிள்ளைகளின் திருமணம் மதச் சடங்குகள் இல்லாமல்தான் நடந்தது.
பெரிய அண்ணனின் திருமணம் உறவு முறை திருமணம்தான். ஆனால் மத சம்பிரதாயப்படி நடத்த முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். அப்படியே நடந்தது.
இன்குலாப் அண்ணன் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டார். வீரமணிதான் அந்தத் திருமணத்திற்கு தலைமை தாங்கினார்.
என்னுடைய திருமணமும் மத சம்பிரதாயப்படி நடக்கவில்லை கவிக்கோ அப்துல்ரகுமான் தலைமையில் நடந்தது. ஆனாலும் எங்கள் திருமணத்திற்கு உறவினர்கள் வரத்தான் செய்தார்கள்.
உங்களுக்குப் பிடித்த அப்பாவோட கவிதை ஒன்னு சொல்லுங்க…
பிரமிடுகளைப் பற்றி எனது பதின் பருவத்தில் பிரமிக்கத் தக்க அதிசயமாகத்தான் நான் படித்திருக்கிறேன்.
ஆனால் அதைப் பற்றி அப்பா எழுதியதைப் படித்த பிறகுதான்.. அவை எத்தனை அடிமைகளின் ரத்தத்தாலும் எலும்புகளும் உருவாக்கப்பட்டன என்பது தெரிந்தது..
அப்பாவிற்கு மென்மை வராது அழகியல் வராது என்று கூறப்படுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவரது ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்ற கவிதையில், அவர் எந்த அளவுக்கு ஒவ்வொரு உயிரினத்தையும் நேசிப்பவர் என்பதும் சாதி மதம் கடந்து மனித நேயத்தை விரும்புகிறவர் என்பதையும் பார்க்கலாம்.
வீட்டைச் சுற்றி தென்னை, தேக்கு, நெல்லி, சப்போட்டா என்று நிறைய மரங்களை அவர் பார்த்துப் பார்த்து வளர்த்தார். வீட்டிற்கு பசுங்குடில் என்று பெயர் வைத்திருந்தார்.
என் பசுங்குடிலைச் சுற்றி என்று அவர் எழுதிய கவிதையில்,
மரங்களையும், அணில்களையும், கவுதாரிகளையும், பாம்புகளையும் படம் பிடித்திருப்பார்.
சாத்துக்குடிக் கன்று ஒன்று பின் வீட்டார் குப்பைகளை எரித்த நெருப்பில் கருகிப் போனதைக் குறிப்பிட்டிருப்பார்.
“அந்தக் கன்றின் கதை முடிந்தது என்றிருந்தேன்
பாத்திகளுக்குப் பாயும் நீர் அதற்கும் பொசிந்தது.
பூக்கிற காலம்
நான்கு நாட்களுக்கு முன்
அதுவும் அரும்பியது
வெள்ளையாய்.
பேரன் சொன்னது
நினைவுக்கு வந்தது
எனது காலும் வளரும் என்று..
(சர்க்கரை நோய் காரணமாக இன்குலாப்பின் ஒரு கால் எடுக்கப்பட்டிருந்தது)
அவர் பார்த்துப் பார்த்து வளர்த்த மரங்கள் சமீபத்தில் வந்த வர்தா புயலில் பெரும் சேதமடைந்து விட்டது. அப்பாவுடன் சேர்ந்து அந்த மரங்களும் போய் விட்டது போலத் தோன்றுகிறது.
– க.சிவஞானம்