ஒரே ராக்கெட் மூலம் 83 வெளிநாட்டு செயற்கைகோள்களை, வரும் ஜனவரி இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகள், பி.எஸ்.எல்.வி சி37 என்ற ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் 22–ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி–சி34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து உள்ளது.
ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த 2014–ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 37 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வரலாற்றில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து அமெரிக்க விண்வெளி மையம் கடந்த 2013–ம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 29 செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியது.
மேற்கண்ட நாடுகளின் சாதனையை முறியடிப்பதற்காக 4 நிலைகளைக் கொண்ட பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல் வகையிலான ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் அமெரிக்காவுக்கு சொந்தமான 60 செயற்கைகோள்களும், ஐரோப்பிய நாடுகளுக்கு சொந்தமான 20 செயற்கைகோளும், இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான 3 செயற்கைகோள்களும் அடங்கும்.
இந்த செயற்கைகோள்களை 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ராக்கெட் ஏவப்பட்டு 25 நிமிடங்களில் சுமார் 500 கிலோ மீட்டர் தூரத்தில் அவை நிலை நிறுத்தப்பட உள்ளன. வெற்றிகரமாக இந்த சாதனை அமையுமெனில், இஸ்ரோவின் உலக சாதனையாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.