பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது ஐநா சபை: ட்ரம்ப்

ஐக்கிய நாடுகள் சபை வெறும் பொழுது போக்கு கிளப் ஆக மாறிவிட்டது என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஐநா அமைப்புக்கு மிக அதிக அளவில் ஆற்றல் உள்ளது, ஆனால் அந்த அமைப்பு மக்கள் ஒன்று கூடி சந்தித்து பேசி மகிழும் கிளப் போல மாறிவிட்டது என விமர்சித்துள்ளார்.

ஐநா அமைப்பின் தற்போதைய நிலைமை தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் ட்ரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐநாவில் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை தடுக்க ட்ரம்ப் முயற்சி செய்தார்.எனினும் அதிபர் ஒபாமா தலைமையிலான நிர்வாகம் ஐநா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ஜனவரி 20ஆம் திகதி தான் அதிபராக பதவி ஏற்ற பிறகு நிலைமை மாறும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.