சொன்னதை கேட்கும் ரோபோ கரம்!

பெரிய தொழிற்சாலைகளில் தான், ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்ற, ஒரு சீன நிறுவனம் முன்வந்திருக்கிறது. இந்நிறுவனம் உருவாக்கிய, ‘டூபாட் எம்-1’ என்ற ரோபோ கரம், சிறிய நிறுவனங்களில், திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை, செம்மையாக செய்கிறது.

டூபாட் ரோபோவை, விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் கணினிகள் மூலம் நிரல்களை எழுதி இயக்க முடியும். 52 செ.மீ., உயரம் உள்ள இந்த ரோபோவால், 40 செ.மீ., துாரம் வரை கையை நீட்ட முடியும்.

இந்த ரோபோவுக்கு, 1.5 கிலோ எடையுள்ள பொருட்களை துாக்கும் பலம் உண்டு. திருகாணிகளை மாட்டி திருகுவது, பொருட்களை இடம் மாற்றி வைப்பது, வார்ப்பு மற்றும் வடிவமைப்பில் உதவுவது போன்ற வேலை களுக்கு நிரல்களை எழுதி பழக்கினால், டூபாட் அச்சு மாறாமல் அப்படியே திரும்பத் திரும்ப செய்யும். இதனால், சிறு பட்டறைகள் முதல் பொருட்களை கையாளும் சரக்கு கிடங்குகள் வரை இந்த ரோபோவை பயன்படுத்தலாம்.

லேசர் வெல்டிங் சாதனத்தை, டூபாட்டின் கரங்களில் பொருத்தி விட்டால், துல்லியமாக வெல்டிங் செய்யவும் இது தயாராக இருக்கிறது. டூபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள கேமராவால், இந்த ரோபோ கையாளும் பொருட்களின் நிறம், அளவு போன்றவற்றை உணர முடியும்.

வரும், 2017 மே மாதம் விற்பனைக்கு வரவுள்ள டூபாட்டின் விலை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்! தற்போது, கிக் ஸ்டார்ட்டர் தளத்தில் பலரது ஆதரவை பெற்றுள்ளது இந்த ரோபோ கரம்!