நோயாளிக்கு தரும் ரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை வேகமாக பிரித்தெடுப்பது, மருத்துவர்களுக்கு சவாலான வேலை.
இதை எளிதாக்க, காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந்திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம், ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டிடியூட்’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன், ‘ஆன்டிபாக்டி’யை மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாக்டியை மிக நுண்ணிய இரும்புத் துகள்களில் பூசி, அத்துகள்களை ரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த ரத்தத்தை சுத்திகரிக்கும், ‘டயாலிசிஸ்’ இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர். இதனால் ரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக தனிப்படுத்தப்பட்டு விடும்.
தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், ரத்தம் துாய்மையானதாகி விடும். விலங்கு ரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. எனவே, விரைவில் மனித ரத்தத்திலும் காந்த சுத்திகரிப்பு முறையை சோதிக்க ஹார்வர்டு மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர்.