ரவிராஜ் படுகொலைக்கான தீர்ப்பு தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியொன்றை சொல்லியிருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று சனிக்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையில்:
இலங்கை நீதிமன்றுகளின் ஊடாக தீர்வு கிடைக்காதென்ற செய்தி தற்போது உறுதியாக கிடைத்திருப்பதாகத் தெரிவித்த அவர் சர்வதேச விசாரணை மட்டுமே நீதியை தருமென்ற எமது நிலைப்பாட்டை இது உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் இத்தீர்ப்பின் மூலம் மீண்டும் ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கே.சிவாஜிலிங்கம் இனியும் உள்ளுர் விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமென தமிழ் மக்களில் எவரேனும் நம்பியிருந்தால் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களெனவும் தெரிவித்தார்.
இலங்கையில் நல்லாட்சி வந்திருப்பதாக சொல்லுகின்ற அரசு தனது இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தைக் கொண்டாடுகின்ற நிலையில் இலங்கை நீதித்துறை தமிழ் மக்களிற்கு தெளிவான செய்தியை சொல்லியிருக்கின்றது. நள்ளிரவில் கிடைத்த அந்த தீர்ப்பின் மூலம் தமிழர்கள் போடுகின்ற எச்சில் துண்டுகளை பெற்றுக்கொள்ள மட்டுமே தகுதியுள்ளவர்கள் என்ற சிங்கள ஆட்சியாளர்களது மனநிலை வெளிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal