பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்துவத்தை நாங்கள் அறிவோம்-ஆசாத் ஷபிக்

அவுஸ்ரேலியாவிற்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடக்க இருக்கும் பாக்சிங் டே டெஸ்டின் முக்கியத்தும் குறித்து எங்களுக்குத் தெரியும் என ஆசாத் ஷபிக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் 26-ந்திகதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் தொடங்கும் இந்த போட்டி ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் போட்டியை சுமார் 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மேல் நேரில் பார்ப்பார்கள். இதனால் அதிக அளவு ரசிகர்கள் மத்தியில் விளையாட எந்தவொரு வீரர்களும் ஆசைப்படுவார்கள். அதே ஆசை பாகிஸ்தான் வீரர்களுக்கும் உள்ளது.

இதுகுறித்து அந்த அணியின் பேட்ஸ்மேன் ஆசாத் ஷபிக் கூறுகையில் ‘‘இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்குத் தெரியும். பாக்சிங் டே நாளில் நடக்கும் இது ஒரு பெரிய போட்டி. பாகிஸ்தானில் இருந்து ‘பாக்சிங் டே’ டெஸ்டை பார்த்து வளர்ந்திருக்கிறோம். இந்த டெஸ்டின் மதிப்பு எங்களுக்குத் தெரியும்.

இதுபோன்ற மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நாங்கள் பொதுவாக விளையாடாத காரணத்தில் சற்று நெருக்கடி இருக்கும் என உணர்கிறோம். மதிப்புமிக்க வரலாறு படைத்த மைதானத்தில் விளையாடுவது எனக்கு மிகப்பெரிய கவுரவம். எல்லோருக்கும்தான்.

குறிப்பாக முதன்முறையாக இங்கு விளையாட இருப்பது உற்சாகத்தை அளிக்கும். முதல் டெஸ்டில் நாங்கள் ஒருங்கிணைந்து விளையாடிதுபோல், ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அடுத்த இரண்டு போட்டியிலும் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.