பாதுகாப்பை அதிகரித்தது அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம்

அவுஸ்ரேலியாவில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் ‘பாக்சிங் டே’ டெஸ்டிற்கான பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியா சென்று விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்ரேலியா கடும் போராட்டத்திற்குப் பின் 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது போட்டி பிரபலமான மெல்போர்ன் மைதானத்தில் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் என்று அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாள் நடைபெறும் போட்டி 26-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் மைதானத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியை நேரில் காண வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மெல்போர்ன் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் மெல்போர்ன் போட்டிக்கான பாதுகாப்பை அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரியம் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே, பாரிஸ் தாக்குதலுக்குப்பிறகு பாதுகாப்பு காரணமாக கடந்த ஆண்டு மைதானத்தில் இருந்து 20 முதல் 25 மீட்டருக்கு அப்பால் தடுப்பு வேலி அமைத்து, ரசிகர்களை சோதனை செய்து டிக்கெட்டுக்களை வாங்கியபின் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.