பார்வை பறிபோனவர்களும் இனி பார்க்க முடியும்!

பார்வை பறிபோனவர்களாக இருட்டு வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் பலருக்கு பார்வையளிக்கும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, கைமேல் பலனளிக்க தொடங்கியுள்ளது.

செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.
லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவ சிகிச்சை இரண்டு மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
a2ab5fcd-8050-4844-9ec3-3d7ca4072fc6_l_styvpf
இந்த கருவி அடுத்த மாதத்தில் 10 பேருக்கு இலவசமாக பொருத்தப்பட இருக்கிறது. மான்செஸ்டர் ராயல் கண் மருத்துவமனையில் ஐந்து பேருக்கும், மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையில் ஐந்து பேருக்கும் செயற்கை கண் வழங்குவதற்கான சிகிச்சையளிக்கப்பட இருக்கிறது.
அதிவேகமாக காட்சிகளை படமாக்கும் 500 பிக்ஸல்ஸ்களை கொண்ட நவீன கேமரா, படமாக்கப்பட்ட புகைப்படங்களை திறன்பட மூளைக்கு பரிமாற்றம் செய்ய சிப்செட்கள் மற்றும், காட்சியை மூளை மண்டலத்துக்கு அனுப்பி, பிம்பமாக்கி பார்வையை வழங்கும் அதிநவீன கண்ணாடிகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, இடைக்காலத்தில் முற்றிலும் பார்வை பறிபோனவர்களுக்கும் பார்வையை வழங்க இந்த ‘பயோனிக் ஐ’ உதவுகின்றது.
அறுவை சிகிச்சை மூலம் பயோனிக் ஐ பொருத்தப்படுகிறது. பயோனிக் ஐ மூலம் படமாக்கப்பட்ட புகைப்படங்கள் மூளையின் பார்வையை வழங்கும் நரம்புகளுக்கு அனுப்புகிறது. பின் மூளையில் இருந்து பயனர் ஒளியின் மூலம் புகைப்படங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன.
முன்னதாக, இந்த புதிய முறையின் மூலம் மீண்டும் கண்பார்வையை வழங்கும் பரிசோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் பயோனிக் ஐ பொருத்தப்பட்ட சிலரால் பெரிய எழுத்துகளையும் பார்க்க முடிந்தது என மான்செஸ்டர் மருத்துவமனையின் பேராசிரியர் பாலோ ஸ்டங்கா தெரிவித்துள்ளார்.
தற்சமயம் முதற்கட்ட சோதனைகள் வெற்றியடைந்து, விரைவில் பரவலான பயன்பாட்டிற்கு ‘பயோனிக் ஐ’ சாதனம் வரவுள்ள நிலையில், தொடர்ச்சியான அடுத்தகட்ட ஆய்வுகளின் பலனாக இந்த தொழில்நுட்பம் பல்வேறு பரிமாணங்களை கடந்து, வளர்ச்சியடைந்து ஒருகட்டத்தில் அதிக தரம் கொணட் காட்சிகளை பார்க்க வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.