உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து வைத்தியர்கள் சாதனை படைத்தனர்.
போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் ஆடம் டொமேன்ஸ் விகாவிடம் சென்று சிகிச்சை ஆலோசனை பெற்றார்.
அப்போது மரணம் அடைந்த ஒருவரின் கையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இறந்தவரின் கை தானமாக பெறப்பட்டது.
அதை தொடர்ந்து கடந்த 15-ந்திகதி கை இல்லாத நபருக்கு டாக்டர் ஆடம் தலைமையிலான குழுவினர் ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பொருத்தினர். தற்போது பொருத்தப்பட்ட கைகளில் நரம்பு மற்றும் ரத்த ஓட்டம் சீராகி நல்ல முறையில் செயல்படுகிறது.
இந்த ஆபரேசன் 13 மணி நேரம் நடந்தது. இதன் மூலம் உலகிலேயே முதன் முறையாக இறந்தவரின் கையை பொருத்தி போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
12 முதல் 13 மணி நேரம் நடந்த இந்த ஆபரேசன் 2 குழுவினரால் நடத்தப்பட்டது. ஒரு குழுவினர் இறந்தவரின் கையை அகற்றினர். மற்றொரு குழுவினர் கை இல்லாதவருக்கு தானமாக பெறப்பட்ட கையை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எலும்புகள் டைட்டானியம் தகடுகள் மற்றும் ஸ்குருக்களால் இணைக்கப்பட்டது. அந்த தகடுகள் அகற்றப்படாமல் அப்படியே இருக்கும். தசை நார்களும், தசைகளும் ரத்த நாளங்களுடன் இணைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ரத்த ஓட்டம் சீரானதும் இணைக்கப்பட்ட நரம்புகள், தசைநார்கள் மற்றும் தசைகள் வழக்கமான கை போன்று செயல்படும்.
இதன் மூலம் உலகம் முழுவதும் கை இல்லாமல் தவிப்போரின் குறைகள் நீக்கப்படும் என டாக்டர் ஆடம் தெரிவித்தார். மேலும் 80 பேர் இத்தகைய அறுவை சிகிச்சைக்கு காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.