அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மெல்போர்ன் ரெனேகட்ஸ்.
இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் அவுஸ்ரேலியாவில் பிக் பாஷ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. 2016-17-க்கான தொடர் நேற்று முன்தினம் (20-ந்தேதி) தொடங்கியது. 22 ஆம் திகதி நடைபெற்ற 3-வது போட்டியில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் – சிட்னி தண்டர் அணிகள் மெல்போர்ன் மைதனாத்தில் மோதின.
டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா அணியின் டி20 வீரரான ஆரோன் பிஞ்ச் 37 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 63 ரன்கள் குவித்தார். அடுத்ததாக பெர்குசன் 38 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கிப்சன் (39), கேப்டன் ரோஹர் (30) மற்றும் கம்மின்ஸ் (37) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க 19.1 ஒவரில் 131 ரன்னுக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனால் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.