அவுஸ்ரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 தீவிரவாதிகளை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்திவரும் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தனது நாட்டு வீரர்களை ஈடுபடுத்திவரும் அவுஸ்ரேலியாவை தாக்க ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள் பிரகடனம் செய்துள்ளன.
இதையடுத்து, அமைதியான நாடாக அறியப்பட்ட அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அச்சுறுத்தல் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பல்வேறு தாக்குதல்கள் தொடர்பான திட்டங்களையும், முயற்சிகளையும் அந்நாட்டு உளவுத்துறையினர் முளையிலேயே கிள்ளி எறிந்துள்ளனர். தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை வெகு துல்லியமாக கண்காணித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், மெல்போர்ன் நகரில் உள்ள பெடரேஷன் சதுக்கம், செயின்ட் பால் தேவாலயம், பரப்பு மிகுந்த பிலின்டர்ஸ் ஸ்டிரீட் ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டு, இந்த தாக்குதலை நடத்த தயாராக இருந்ததாகவும் அவுஸ்ரேலியா காவல்துறை உயரதிகாரி ஆன்ட்ரு கால்வின் இன்று தெரிவித்துள்ளார்.
கைதானவர்கள் அனைவருமே 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என குறிப்பிட்டுள்ள அவர், உரிய விசாரணைக்கு பின்னர் கைதானவர்களில் இருவர் விடுவிக்கப்பட்டதாகவும், மீதமுள்ள ஐந்துபேரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து, விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நிருபர்களிடம் கூறினார்.