சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2016-ம் வருடத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை அஸ்வின் பெறுகிறார்.
இந்த விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின். இதற்கு முன்னர் ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010) இந்த விருதினை வென்றுள்ளனர். ஒரே வருடத்தில் இரு விருதுகளை பெறும் இரண்டாவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் அஸ்வின் பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் (2004) மட்டுமே இவ்வாறு 2 விருதுகளை பெற்றுள்ளார்.
இந்த விருதுத் தேர்வுக்கான காலத்தில் அஸ்வின் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளையும், 336 ரன்களையும் சேர்த்துள்ளார். மேலும் 19 டி20 போட்டிகளில், 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையிலும் முதல் இடத்தில் இருந்து வரும் இந்திய வீரர் அஸ்வின், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 28 விக்கெட்டுகளையும், 4 அரை சதங்களையும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.