தனிம அட்டவணையில் நான்கு புதிய தனிமங்கள்!

கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், ‘பீரியாடிக் டேபிள்’ எனப்படும் தனிம அட்டவணையில், புதிதாக நான்கு தனிமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது.

புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு பரிசீலித்து, தகுதியிருந்தால், உலகுக்கு அறிவிக்கும்.

அண்மையில் சேர்க்கப்பட்ட தனிமங்களுக்கு, 113, 115, 117 மற்றும் 118 ஆகிய அணு எண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள் முறையே நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னிசைன் மற்றும் ஓகானிசன். இந்த புதிய தனிமங்களை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மையங்கள் கண்டறிந்துள்ளன.

கடந்த ஆண்டே, ஐ.யு.பி.ஏ.சி., இவற்றை அங்கீகரித்தாலும், அண்மையில் தான் அதிகாரபூர்வமாக அந்த அமைப்பு, தனிம அட்டவணையில் அவற்றை சேர்த்துள்ளது. ஐ.யு.பி.ஏ.சி.,யின் அளவு கோல்களுக்கு இத்தனிமங்கள் ஏற்றவையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், கனமான அணுத் துகள்களைக் கொண்ட இத்தனிமங்கள் தற்காலிகமானவைதான்.

அதாவது, விஞ்ஞானிகளால் இவற்றை ஆய்வுக்கூடத்தில் ஒரு வினாடி நேரத்திற்கே உருவாக்க முடிந்தது. அதற்கு பின் அவை வேறு தனிமங்களாக உருமாறும் தன்மை கொண்டவையாக உள்ளன. உலகிலுள்ள பொருட்களை வேதியியல் முறையில் பகுத்து, வகைப்படுத்துவதற்காக, 1869ம் ஆண்டு, தனிம அட்டவணை உருவாக்கப்பட்டது.

தனிமங்களின் அணுக் கட்டமைப்பை அளந்து, இன்று வரை, படிப்படியாக மொத்தம், 118 தனிமங்களை, விஞ்ஞானிகள், அட்டவணையில் பதிவு செய்துள்ளனர்.