கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இணையம் ஒரு வகுப்பறை யாக இருக்கும். உங்கள் ஆர்வம் அல்லது தேடல் தொடர்பான எந்தத் தலைப்பிலான வீடியோ பாடங்களையும் இணையத்தில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது இந்தத் தேடலில் கைகொடுக்க வந்துள்ளது ‘ஃபைண்ட்லெக்சர்ஸ்’ எனும் இனையதளம்.
கோர்சரா, கான் அகாடமி போன்ற இணையத் திட்டங்கள் இத்தகைய பாடங்களை வழங்கி வருகின்றன என்றால், உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான எம்.ஐ.டி, ஆக்ஸ்ஃபோர்ட் உள்ளிட்டவற்றின் பாடங்கள் மற்றும் பேராசிரியர்களின் உரைகளும் இணையம் மூலம் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கின்றன. யூடியூப்பிலும் கல்வி தொடர்பான வீடியோ சேனல்கள் அநேகம் இருக்கின்றன. எழுச்சி உரைகளுக்காக அறியப்படும் டெட் அமைப்பின் இணையதளத்திலும் ஊக்கம் தரும் வீடியோக்கள் இருக்கின்றன.
மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் நிகழ்த்தப்படும் உரைகள், வல்லுநர்களின் பேச்சுக்கள் ஆகியவற்றின் வீடியோக் களும் இணையத்தில் உடனுக்குடன் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய வீடியோ உரைகளை ஒரே இடத்தில் அணுகும் வசதியை இத்தளம் அளிக்கிறது. அந்த வகையில் இதனை வீடியோ உரைகளுக்கான தேடியந்திரம் என்றும் சொல்லலாம்.
கூகுளில் உள்ளது போல தேடல் கட்டம் வழியாகத் தேடுவது தவிர, உரைகளின் வகை, அவற்றின் தன்மை எனப் பலவிதங்களில் தேடும் வசதியும் இடம்பெற்றுள்ளது.
இணையதள முகவரி: https://www.findlectures.com