ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்கப் நீட்டிக்க சில டிப்ஸ்

ஸ்மார்ட்போன் பயனர்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருப்பது, அதன் பேட்டரி பேக்கப் எனலாம். ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய பலரிடம் எந்நேரமும் பவர் பேங்க் காணப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. துவக்கம் முதலே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சரி செய்வதை விட அதிகளவு பேட்டரியை தான் வழங்கி வருகின்றன.
சில ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி பேக்கப் நேரத்தை சற்றே கூடுதலாக பெற முடியும். அப்படியாக பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..
செயலிகள்
எந்நேரமும் அனைத்து செயலிகளையும் ஓபன் செய்து வைத்தால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். இதனால் பயன்படுத்தாத செயலிகளை அவ்வப்போது மூடி விடுவது பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்கும்.
பிரைட்னஸ் அளவு
ஸ்மார்ட்போன் திரையின் பிரைட்னஸ் அளவினை அதிகமாக வைத்திருந்தால், பேட்டரியின் முழு சக்தியும் சீக்கிரம் காலியாகி விடும். இதனால் வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் அளவு வைப்பது மற்றும் ஆட்டோ பிரைட்னஸ் மோடு உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ளலாம்.
கனெக்டிவிட்டி
வைபை, ப்ளூடூத் மற்றும் GPS உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்தாத சமயத்தில் ஆஃப் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக கிடைக்கும்.
ஆன்லைன் சின்க்
நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கான சின்க் ஆப்ஷனை ஆஃப் செய்து வைக்கும் போதும் பேட்டரியின் பேக்கப் நேரம் அதிகரிக்கும். இந்த ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டிருக்கும் போது எந்நேரமும் செயலி இயக்கப்படுவதால் பேட்டரி அதிகம் செலவாகும்.
கேமிங்
உயர் ரக கேம்களை விளையாடாமல் இருந்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் கிடைக்கும். ஸ்மார்ட்போன்களில் அதிக நேர பேட்டரி பேக்கப் வேண்டுமெனில் கேமிங் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்.