கே.பியை கைது செய்ய உத்தரவில்லை – கொழும்பு நீதிமன்றம்

விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொட இதனை தெரிவித்தார்.

ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியுமென்று கூறிய நீதிபதி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு கைது உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாதென்று அறிவித்தார்.

இந்த மனு அழைக்கப்பட்ட போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பந்தமாக குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு இந்திய நீதிமன்றமொன்று உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும் அவரை கைது செய்து நாடு கடத்த இலங்கை அரசாங்கம் மறுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டை நிராகரித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்திய அரசாங்கத்திடமிருந்து முறையான வேண்டுகோளொன்று முன்வைக்கப்பட்டால் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியுமென்று கூறினார்.

குமரன் பத்மநாதன் தொடர்பாக போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற காரணத்தினால் இந்த மனு முன்கொண்டு விசாரணை செய்யும் அவசியம் ஏற்படவில்லையென அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் படி குமரன் பத்மநாதன் சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ள போலீசாருக்கு மேலும் கால அவகாசம் வழங்கிய நீதிபதி, மனு மீதான விசாரணைகளை எதிர் வரும் மார்ச் மாதம் 17-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக உத்தரவிட்டார்.